Published : 12 Aug 2014 01:03 PM
Last Updated : 12 Aug 2014 01:03 PM
பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பை வெளியிட்டார்.
அண்மையில், ஊக்கத்தொகையை அதிகரிக்கக் கோரி தமிழகம் முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊக்கத்தொகை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா: "அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்கள், முதுநிலை பட்டயம் பயிலும் மருத்துவர்கள், உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்கள், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்கள் என 4,088 பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக் கால உதவித் தொகை உயர்த்தித் தரப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையினை ஏற்று, பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகை 8,500 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாகவும், முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல்ஆண்டிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 19,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 20,000 ரூபாயிலிருந்து 27,000 ரூபாயாகவும், முதுநிலை பட்டயம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 19,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 21,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 22,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 23,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை நான்காம் ஆண்டிற்கு 21,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், ஐந்தாம் ஆண்டிற்கு 22,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், ஆறாம் ஆண்டிற்கு 30,000 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.
இது தவிர, பயிற்சி மருத்துவர்களுக்கு ஆண்டு உதவித் தொகை உயர்வு 400 ரூபாய் எனவும், முதுநிலை மருத்துவர்களுக்கு 700 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 74 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT