Published : 14 Aug 2014 10:00 AM
Last Updated : 14 Aug 2014 10:00 AM
சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்திய கணக்குத் தணிக்கையாளர் ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை பெருநகரப் பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் முறையே 3 ஆயிரம் சதுர மீட்டர் மற்றும் 2,500 சதுர மீட்டர் நிலப் பரப்பைவிட கூடுதலாக குடியிருப்பு, வணிக நிறுவனம் மற்றும் ஆலை போன்றவற்றை கட்டும்போது, மனையின் மொத்தப் பரப்பளவில் 10 சதவீதத்தை (சாலைக்கு ஒதுக்கப்பட்டது தவிர்த்து) பொதுப் பயன்பாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம்-1971 மற்றும் வளர்ச்சிக் கட்டுப்பாட்டு விதி ஒழுங்குமுறை வகுக்கப்பட்டுள்ளது (அந்த இடத்தில் பூங்கா அமைக்கப் பட்டு பொதுப் பயன்பாட்டுக்கு விடவேண்டும்).
2007 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 582 ஓஎஸ்ஆர் நிலங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில், 151 ஓஎஸ்ஆர் நிலங்கள் மட்டுமே பூங்காக்களாக மேம்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
ரூ.442.84 கோடி மதிப்புள்ள நிலங்கள் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன. ரூ.21.20 கோடி மதிப்புள்ள ஓஎஸ்ஆர் நிலங்கள் சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தன. ரூ.3.8 கோடி அளவுக்கு நிலங்கள் அனுமதியின்றி விற்கப்பட்டிருந்தன.
சென்னை வேளச்சேரியில் 4,379 சதுர மீட்டர் ஓஎஸ்ஆர் நிலம், 2001-ல் உரிமையாளரால் மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டது. அதை மாநகராட்சி தனது கட்டுக்குள் கொண்டுவரத் தவறியதால் அங்கு 33 வீடுகள் கட்டப்பட்டன. ரூ.21.20 கோடி மதிப்புள்ள அந்த நிலம், தனியாரால் சட்டத்துக்குப் புறம்பாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தணிக்கை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT