Published : 07 Aug 2018 09:00 PM
Last Updated : 07 Aug 2018 09:00 PM

பல வரலாறுகளைப் படைத்த பல்கலைக்கழகம் மறைந்ததே!- ராமதாஸ் இரங்கல்

நெருக்கடிகளுக்குப் பணியாத போராட்டக் குணம் மிக்கவர் கருணாநிதி. பல திறமை பெற்ற பல்கலைக்கழகம் மறைந்தது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து, எனது வாழ்நாளில் இதுவரை எதிர்கொள்ளாத பெரும் அதிர்ச்சியும், வேதனையும், ஆற்றிக்கொள்ள முடியாத துயரமும் அடைந்தேன்.

எனது அரசியல் வாழ்க்கையில் நான் நிலைகுலைந்து போன தருணங்களில் நண்பர் கருணாநிதியின் மறைவுச் செய்தியை அறிந்த நேரமும் ஒன்று. தமிழகத்தின் அரசியலாக இருந்தாலும், திரையுலகம் மற்றும் எழுத்துலகமாக இருந்தாலும் சரி... அவற்றில் கருணாநிதி சாமானியனாக அறிமுகமாகி சமத்துவம் படைத்தவர்.

அவர் கோலோச்சிய ஒவ்வொரு துறையிலும் அவர் ஏறிய உயரங்களை இனி எவராலும் எட்டிப்பிடிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. கருணாநிதியின் வாழ்க்கையை ஆய்வு செய்தால் தொடக்கம் முதல் இறுதி வரை நிறைந்து காணப்படுபவை எழுத்தும், எதிர்நீச்சலும் தான்.

பள்ளிக்குக் கூட துணையுடன் செல்லக்கூடிய 14 வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டு, மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகை மூலம் தம்மை விட மூத்த இளைஞர்களைத் திரட்டி தமிழக மாணவர் சங்கத்தை உருவாக்கிய அவருடைய பொதுவாழ்க்கையின் இன்றைய வயது 80.

இதில் 5 தலைமுறை அரசியல் அடக்கம். இது யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியமாகும். 20 வயதில் திரையுலகில் நுழைந்த கருணாநிதி, 21-வது வயதில் எம்.ஜி.ஆர். நடித்த ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதி தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தவர். 30 வயதில், சிவாஜி அறிமுகமான பராசக்தி படத்திற்கு, கருணாநிதி எழுதிய வசனம் தமிழ் திரையுலகின் போக்கை தலைகீழாக மாற்றியது.

மனோகரா, பாலைவன ரோஜாக்கள், நீதிக்கு தண்டனை என 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதையும், வசனங்களும் சமூக மாற்றத்திற்கு வித்திட்டன என்றால் அது மிகையல்ல. ‘‘வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக?” என்று பராசக்தி படத்திற்காக கருணாநிதி எழுதிய வசனம் இன்றைக்கும் பொருந்தக்கூடியது.

இலக்கிய உலகையும் இளவரசர் முதல் பேரரசர் வரை அனைத்து நிலையிலிருந்தும் ஆட்சி செய்தவர் கருணாநிதி தான். குறளோவியம், தொல்காப்பிய உரை, பாயும் புலி பண்டாரக வன்னியன், ரோமாபுரி பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பொன்னர் சங்கர் உள்ளிட்ட அவரது படைப்புகள் இலக்கிய கருவூலத்தின் இனிமையான சொத்துகள். நெஞ்சுக்கு நீதி அவரது வாழ்க்கை நிகழ்வுகளின் களஞ்சியம்.

அரசியலிலும் கருணாநிதி முன்னேறிய வேகம் வியக்கத்தக்கது ஆகும். எந்தப் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்த கருணாநிதி, 33-வது வயதில் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். 35 வயதில் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பீடத்தில் திமுகவை அமரவைத்து அண்ணாவின் அசைக்க முடியாத தளபதி ஆனார்.

37 வயதில் திமுகவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியது, 43 வயதில் மாநில அமைச்சர், 45 வயதில் தமிழக முதல்வர் என கருணாநிதி அடைந்த முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டமோ, பின்னணியோ காரணமல்ல. அயராத உழைப்பும், தளராத முயற்சிகளும் தான் அவரை உயர்த்தின.

திமுக தொடங்கப்பட்ட காலத்தில் அதன் ஐம்பெரும் தலைவர்களாக போற்றப்பட்டவர்கள் அனைவரும் அறிவார்ந்த அரசியல் செய்து கொண்டிருந்த நிலையில், கருணாநிதி மட்டும் தொண்டர்சார் அரசியலை செய்து கொண்டிருந்தார். அதனால் தான் ஐம்பெரும் தலைவர்களை மதித்த திமுகவினர் அனைவரும் கருணாநிதியைத் தான் ஆதரித்தனர்.

அதனால் தான் அண்ணாவுக்குப் பிறகு அவரால் முதல்வராக முடிந்தது. திமுகவின் வரலாற்றில் கருணாநிதி 50 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். திமுகவின் ஒற்றைத் தலைவர் அவர் மட்டுமே. திமுகவுக்கு அவர் தலைவராக இருந்த காலத்தில் 19 ஆண்டுகள் மட்டும் தான் திமுக ஆட்சியில் இருந்தது. மற்ற காலங்களில் திமுக மிகப்பெரிய நெருக்கடிகளையும், பிளவுகளையும் எதிர்கொண்டது.

ஆனால், அத்தனையையும் எதிர்கொண்டு கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடிந்ததன் காரணம் அவர் எப்போதுமே தொண்டர்களின் தலைவராக வாழ்ந்ததும், வழிநடத்தியதும் தான். தமிழகத்தில் சமூக நீதியை நிலை நிறுத்தியதிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கியதிலும் கருணாநிதியின் பங்கு மகத்தானது.

கருணாநிதியின் ஆட்சியில் தான் அதிகாரத்தின் உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமருவதற்கான படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. தந்தை பெரியாரின் பள்ளியில் படித்தவர் என்பதாலும், அண்ணாவின் தம்பி என்பதாலும் சமூக நீதி, சமத்துவம், சம உரிமை ஆகியவற்றுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரம் பெற்றிருப்பதற்கான காரணகர்த்தர்களில் கருணாநிதி மிக முக்கியமானவர்.

திமுக தலைவர் கருணாநிதியிடம் நான் வியந்த விஷயம் நெருக்கடிகளுக்கு பணியாமல் போராடும் குணம் தான். நெருக்கடி நிலை காலத்தில் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது மட்டுமின்றி, அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் உள்ளிட்ட திமுக தொண்டர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாயினர்.

ஆனாலும் அவற்றுக்கு கருணாநிதி பணியவில்லை என்பது மட்டுமின்றி, தேசியத் தலைவர்கள் பலருக்கு தமிழகத்தில் அடைக்கலம் கொடுத்ததன் மூலம் நெருக்கடி நிலை கொடுமைகளில் இருந்து காப்பாற்றினார். கருணாநிதி மீது விமர்சனங்களும் உண்டு. பல்வேறு காலகட்டங்களில் அவரை நான் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறேன். விமர்சனங்கள் சரியானவையாக இருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கருணாநிதிக்கு உண்டு.

கருணாநிதி அரசின் செயல்பாடுகளை நான் கடுமையாக விமர்சித்த போதெல்லாம், ‘‘தலைவலிக்கு தைலாபுரத்திலிருந்து தைலம் வந்திருக்கிறது’’ என்று கூறி கடந்து செல்லும் பக்குவம் அவருக்கு இருந்தது. என் மீது அன்பும், அக்கறையும் காட்டியவர். கட்சிகளைக் கடந்து எனது கொள்கைப்பிடிப்பையும், போராட்ட குணங்களையும் பாராட்டியவர் கருணாநிதி ஆவார்.

சில மாதங்களுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்த அவரை நான் சந்தித்த போது, என்னை அடையாளம் கண்டு கொண்டு புன்னகைத்தார். கடந்த ஜூலை 29-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காவிரி மருத்துவமனைக்கு அவரது நலம் விசாரிப்பதற்காகச் சென்ற போதும், அவரது உடல்நிலை திடமாக இருப்பதாகவும், விரைவில் இல்லம் திரும்புவார் என்றும் தம்பி ஸ்டாலின் கூறினார்.

அதன்பின் சக்கர நாற்காலியில் அமரும் அளவுக்கு அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்தது. இதனால், அவர் விரைவில் நலம் பெற்று வருவார் என நம்பிக்கொண்டிருந்த வேளையில் தான் அவரது மறைவுச் செய்தி நம்மையெல்லாம் தாக்கியிருக்கிறது. அரசியல் உள்ளிட்ட பல்வேறு கலைகளின் கழகமாக திகழ்ந்த கருணாநிதியின் மறைவு திமுகவுக்கு மட்டுமின்றி, தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திமுக உடன்பிறப்புகளுக்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x