Published : 08 Aug 2018 07:48 PM
Last Updated : 08 Aug 2018 07:48 PM
கருணாநிதியின் உடல் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்று வீட்டிலேயே ஓய்வுபெற்று வந்த நிலையில் கடந்த 27-ம் தேதி உடல் நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 6.10க்கு மரணமடைந்தார்.
அவரது மறைவையொட்டி ராணுவ மரியாதை, 7 நாள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டது. இன்று அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்பட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் சரியாக நான்கு மணிக்கு அவரது உடல் பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு அண்ணா சதுக்கம் நோக்கி இறுதி ஊர்வலம் சென்றது.
ராஜாஜி ஹாலிலிருந்து அண்ணா சதுக்கம் வரை பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வழி நெடுக நின்று அஞ்சலி செலுத்தினர். மக்கள் கூட்டத்தால் அண்ணாசாலை, வாலாஜா சலை, காமராஜர் சாலையெங்கும் மனிதத் தலைகளாக காட்சி அளித்தது. இரண்டு கிலோமீட்டர் தூரத்தை மெல்ல ஊர்ந்து 2 மணி நேரமாகக் கடந்த அவரது இறுதி ஊர்வலம் 6 மணிக்கு மேல் அண்ணா சதுக்கத்தை வந்தடைந்தது.
அங்கு அவரது உடலுக்கு ராகுல் காந்தி, ஆளுநர் பன்வாரிலால், முப்படை தளபதிகள், சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தேவகவுடா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் மீது போரத்தப்பட்ட தேசியக்கொடி அகற்றப்பட்டு மகன் என்ற முறையில் ஸ்டாலினிடம் ராணுவத்தினர் ஒப்படைத்தனர்.
பின்னர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, செல்வி, மு.க.தமிழரசு உட்பட குடும்பத்தினர் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் நீண்டகால நண்பர் பேராசிரியர் அன்பழகனை ஸ்டாலின் கைத்தாங்கலாக அழைத்து வந்தார். அவர் கருணாநிதிக்கு தனது இறுதி அஞ்சலியை மலர் தூவி செலுத்தினார். பின்னர் அவரது உடல் சந்தனப்பெட்டிக்குள் வைக்கப்பட்டது. சந்தனப்பெட்டியில் வைக்கப்பட்ட அவரது உடலில் குடும்பத்தார் உப்பு தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் பெட்டி மூடப்பட்டது.
பின்னர் 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டப்போது மு.க.ஸ்டாலின், செல்வி, அழகிரி உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுதனர். தொண்டர்கள் தலைவர் கலைஞர் வாழ்க என்று கோஷமிட்டபடி இருந்தனர்.
கருணாநிதி உடலுக்கு மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் உட்பட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்திய பின்னர் சரியாக 7.10 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT