Published : 08 Aug 2018 02:53 PM
Last Updated : 08 Aug 2018 02:53 PM
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி சென்னை வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியின் உடலுக்கு நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துவந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி அவருக்கு ரத்தஅழுத்தம் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாத தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், வயதுமூப்பு காரணமாகக் கருணாநிதியின் உடல்உள்ளுறுப்புகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்காத காரணத்தால், நேற்று மாலை 6.10 மணிக்குக் காலமானார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு தேசியத் தலைவர்கள், தமிழகத்தில் உள்ள தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.
தனிவிமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, அங்கிருந்து மீண்டும் டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில், நண்பகல் 2 மணிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமானம் மூலம் சென்னை வந்தார். சிறப்பு வாகனம் மூலம் ராஜாஜி அரங்குக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்கு வைக்கப்பட்டு இருக்கும் கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோரும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கருணாநிதி குடும்பத்தாருக்கும் ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.
கேரள, தெலங்கானா முதல்வர், அகிலேஷ் யாதவ்
மேலும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதிக் கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஆகியோர் ராஜாஜி அரங்குக்கு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரும் நேரில் வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ராஜாஜி அரங்குக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ்மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, கே.வி.தங்கபாலு உள்ளிட்டோரும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT