Published : 08 Aug 2018 08:08 AM
Last Updated : 08 Aug 2018 08:08 AM
ராஜாஜி அரங்கம் வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி உடலுக்கு கறுப்புத்துணி போர்த்திய அவர் பிறகு பேசிய போது, “தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கொள்கைக்காக ஆட்சியில் அமர விரும்பினாரே தவிர அதிகார ஆசையினால் அல்ல. உயிருடன் இருந்த போது நிறைய தடைகளை எதிர்கொண்டார்.
தற்போது மறைந்த பிறகும் தடைகளை எதிர்கொண்டு வருகிறார். இப்போது அவரது அடக்கம் குறித்து தடைகளை எதிர்கொள்கிறார். அவர் என்றும் மறையாதவர்.
திராவிடக் கொள்கையின் காப்பாளரான அவருக்கு என் வணக்கம், அவரது தாய் கட்சி, அவர் உறுப்பினராக இருந்த தாய் கட்சி சார்பாக அவர் குடும்பத்தினர், அவர் தொண்டர்கள், அவரைப் பின்பற்றுபவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். அவரது கொள்கையை கடைப்பிடியுங்கள். அவர் பெரியார், அண்ணா ஆகிய தலைவர்களின் அரசியல் பாதையில் பயணித்தவர். எனவே அவர் வழியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஸ்டாலின் தலைமையில் திராவிடக் கொள்கை மீண்டும் எழுச்சி பெறும். இவர் தலைமையில் திமுக எதில் தொடங்கியதோ அந்த வழியில் செல்லும். திராவிடர் கழகம் திமுகவுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும்” என்றார் வீரமணி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT