Published : 19 Nov 2025 06:42 AM
Last Updated : 19 Nov 2025 06:42 AM
சென்னை: சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான வாக்காளர் உதவி மையம் நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்த உதவி மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகரம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளில் நேற்று காலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான உதவி மையங்கள் தொடங்கி பணிகள் நடைபெற்றன.
வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் உரிய வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர். பொதுமக்கள் தங்களது வாக்குச்சாடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு காலை முதலே ஆர்வமாக வந்து சந்தேகங்களை கேட்டறிந்து, படிவங்களை பூர்த்தி செய்து சென்றனர்.
சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளிலும் இந்த உதவி மையங்கள் நேற்று நடைபெற்றன. தொடர்ந்து நவ.25-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு இந்த உதவி மையங்கள் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக, வாக்குச்சாவடி அலுவலர் கூறுகையில், “ உதவி மையத்துக்கு வருபவர்கள் பெரும்பாலும் 2005-ம் ஆண்டு வாக்கு எங்கு இருந்தது என்பதை பார்த்து சொல்லுமாறு கேட்டனர். அதற்கான தகவல்களை சரிபார்த்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருகிறோம். இந்த உதவி மையத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT