Published : 19 Nov 2025 06:33 AM
Last Updated : 19 Nov 2025 06:33 AM
ரிமோட்டை டிவி மீது வீசிவிட்டு திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டியை அடுத்த புதுக்கரியப்பட்டியில் கவிஞர் சினேகனின் முயற்சியால் நம்மவர் நூலகம், படிப்பகம், கலைக்கூடம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் பேசியதாவது: அன்பு கட்சியை தாண்டியது. அண்ணாவின் மேல் எனக்கு இருக்கும் அன்பும் அப்படிப்பட்டதுதான். அவர்களிடம் கற்ற பிள்ளைகள் அனைவருக்கும், அவர்களிடம் கற்றவர்களுக்கும், இதே குணாதிசயம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். பதவி வரும்போது, பணிவும், துணிவும் வர வேண்டும். பணிவுக்காக, துணிவை இழக்கும் சுயமரியாதை அற்றவர்கள் அல்ல எங்கள் கூட்டம்.
எடுத்ததுமே அரசியல் கட்சியை ஆரம்பிக்காமல் முதலில் தொண்டு செய்து, பிறகு அரசியலுக்கு வந்து மூத்தவர்களிடம், மூத்த கட்சிகளிடம் அறிவுரை பெற்றுக்கொண்டு கட்சி தொடங்கி இருக்கிறேன். இதில், மாற்றுக் கருத்து இருந்தே ஆக வேண்டும். அதற்கு பெயர் தான் ஜனநாயகம். ஆனால், நாடு என்று வரும்போது நாம் கூடி நின்றாக வேண்டும்.
ரிமோட்டை தூக்கி டிவி மேல் போட்டீர்களே... பிறகு ஏன் திமுக கூட்டணிக்கு போனீர்கள்? என்கிறீர்கள். ரிமோட்டை தூக்கி போட்டேன், அதுதான் ஜனநாயகம், அதை விமர்சிக்க வேண்டும். ஆனால், நான் தூக்கிப்போட்ட ரிமோட்டை வேறு ஒருவன் தூக்கிட்டு ஓடிட்டான். ரிமோட் அங்கு போகக்கூடாது. ரிமோட் மாநிலத்தில் தான் இருக்க வேண்டும். கல்வியும் அப்படித்தான் இருக்க வேண்டும். அந்த ரிமோட்டை கொடுப்போமா... எடுத்துட்டு வா ஒளித்துவைத்துக் கொள்வோம்.
ஒருத்தர் மீது ஒருத்தர் அடித்துக் கொள்ள வேண்டாம். யாராவது வந்து ரிமோட்டை தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். அப்படின்னு எடுத்த முடிவுதான் இந்த கூட்டணி. புரிந்தால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் சும்மா இருங்கள். ஜனநாயகம் என்று வந்து விட்டால் இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீர வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். அது வேண்டாம் என்றால், மாற்று அரசியல் என்பது பாசிசம். அது எங்களுக்கு வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT