Published : 19 Nov 2025 06:29 AM
Last Updated : 19 Nov 2025 06:29 AM
சட்டப் பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுவரை 86 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் குறைகளை சரிசெய்ய திமுக தலைமை உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அதன்படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவை மாவட்டத்தில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது எஸ்ஐஆர் பணிகள் குறித்து முதல்வர் விசாரித்தபோது, “அதிமுக பிஎல்ஏ2-க்கள் யாருமே களத்துக்கே வருவதில்லை. நமது நிர்வாகிகள் மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்கள்” என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்பின், “கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக-வே வென்றது. ஆனால், இந்த முறை நிச்சயம் அதிமுக-வை வீழ்த்தி திமுக வெற்றி பெற வேண்டும். அரசின் சாதனைகளை தொகுதி முழுக்க விளம்பரப்படுத்த வேண்டும். மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உதவித் தொகை பெற கட்சியினர் உதவ வேண்டும்” என்று மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT