Published : 18 Nov 2025 07:54 PM
Last Updated : 18 Nov 2025 07:54 PM
சென்னை: ரேஷன் கடைகளில் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சானிட்டரி நாப்கின்களை விநியோகிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் வரும் டிச.16-ம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் சுகாதாரத் துறை உள்ளிட்ட 3 துறைகளின் செயலர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான லட்சுமி ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில், ‘பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் ஆரோக்கியத்தை சுத்தமாக பராமரித்து பேணுவது மிகவும் முக்கியமானது. சானிட்டரி நாப்கின்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் ஏழை, எளிய பெண்கள் நாப்கின்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இதனால் கிராமப்புற பெண்கள் ஆரோக்கிய குறைபாடு காரணமாக மாற்று நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளிகளில் இலவசமாக நாப்கின்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நாப்கின்களை பெண்களுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்க எந்த திட்டமும் இல்லை. எனவே, கிராமப்புற ஏழை, எளிய பெண்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் மூலமாக நாப்கின்களை இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக பதிலளிக்க அரசுத் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.
அதற்கு ஏற்கெனவே இறுதி அவகாசம் வழங்கியும், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், வரும் டிச.16-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் சமூக நலத்துறை, உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதாரத் துறை என 3 துறைச் செயலர்களும் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT