Published : 18 Nov 2025 05:13 PM
Last Updated : 18 Nov 2025 05:13 PM

பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான்: திண்டுக்கல் சீனிவாசன் 

திண்டுக்கல்: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி அதிமுக சார்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஹாரில் பாஜக கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான். தமிழகத்தில் 220 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி, பிஹாரில் நிதிஷ்குமார் முதல்வரானது போல் முதல்வராவார்.

எஸ்ஐஆரை எதிர்க்க ஒன்றும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் நடைபெற்றுள்ளது. எதற்காக இதை எதிர்க்கிறார்கள் என தெரியவில்லை. எஸ்ஐஆர் படிவம் நிரப்பும் இடத்தில் திமுகவினர் தான் இருக்கிறார்கள். எஸ்ஐஆரை வீடு வீடாகக் கொண்டு சேர்க்கவேண்டும்.

எஸ்ஐஆர் பணியை அரசு ஊழியர்கள் புறக்கணித்துள்ளனர். 234 தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் என்ன செய்வார்கள். அரசு ஊழியர்கள் செய்வது சரியானதே.

தமிழகத்தில் எஸ்ஐஆர் ஆல் ஒரு கோடி வாக்குகள் குறையும் என சீமான் சொல்வதை விட அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் மட்டும் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாக்குகள் வரை குறைய வாய்ப்புள்ளது. தவெக எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு தெரிவித்தது குறித்து விஜய்யிடம் தான் கேட்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x