Published : 18 Nov 2025 03:03 PM
Last Updated : 18 Nov 2025 03:03 PM
திருநெல்வேலி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளுக்கு எதிராக வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்த திமுக அரசு தூண்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலியில் வ.உ.சி-யின் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வ.உ.சி-க்கு அஞ்சலி செலுத்துவதில் பெருமைப் படுகிறோம். சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவப்படுத்துவதில் முதல் ஆளாக இருப்பவர் பிரதமர் மோடி.
திருநெல்வேலி மக்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை எதிர்த்து வருவாய்த் துறையினர் தமிழகத்தில் போராட்டம் அறிவித்துள்ளனர். திமுக அரசு தான் வருவாய்த் துறையினரை தூண்டிவிட்டுள்ளது. வருவாய்த் துறையினர் அரசு மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர்.
தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை திமுக அரசு அடித்து மிரட்டியது. இப்போது அவர்களுக்கு சோறு கொடுக்கிறார்கள். சோறு கொடுத்தால் மட்டும் போதுமா?. பாஜகவும் விஜய்யும் கூட்டு சேர்ந்துவிட்டனர் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுக்கு கூறியுள்ளார் . அவரது விருப்பம் நிறைவேறும்.
எங்களது கூட்டணி குறித்து 2026 ஜனவரி 1ம் தேதிக்கு பின்பு அறிவிப்போம். பிஹாரில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அதுபோன்ற நிலைமை தமிழக வெற்றி கழகத்திற்கும் ஏற்படும்.” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT