Last Updated : 18 Nov, 2025 02:30 PM

 

Published : 18 Nov 2025 02:30 PM
Last Updated : 18 Nov 2025 02:30 PM

மீனாட்சியம்மன் கோயில் பிரசாத பொருட்கள் விலை உயர்வு: திரும்பப் பெற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலை கண்ணன், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “மதுரை மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்டால்கள் அமைத்து சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வடை, அப்பம், லட்டு, முருக்கு, புட்டு போன்ற பிரசாதப் பொருட்கள் கோயில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்படுகிறது.

இந்த பிரசாத பொருட்களின் விலை நேற்று முதல 50 சதவிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பக்தர்களுக்கு அதிர்ச்சியும் வேதனையும் அளித்துள்ளது. ரூ.10-க்கு விற்கப்பட்ட பிரசாத பொருட்கள் ரூ.15 என உயரத்தப்பட்டுள்ளது. சபரிமலை சீசன் தொடங்கியதால் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமலும், பக்தர்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமலும் வியாபார நோக்கத்தோடு பிரசாத பொருட்களின் விலையை திடீரென ஏற்றியதை இந்து மக்கள் கட்சி கண்டிக்கிறது.

இந்த விலை உயர்வுக்கு கோயில் நிர்வாகம் தரப்பில் இதற்கு முன்னர் 2011-ல் பிரசாதப் பொருட்களின் விலை பத்து ரூபாயாக உயர்த்தப்பட்டது என்றும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் விலையேற்றப் பட்டுள்ளது என்றும் தனியார் உணவகங்களின் விலையை ஒப்பிட்டு விலை உயர்த்துவதற்கான காரணத்தை கூறுவது ஏற்புடையது அல்ல.

அப்படி என்றால் பல ஆயிரம் கோடிக்கு சொத்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவிலும், வருமானம் பார்க்கும் தனியார் உணவகங்களும் ஒன்றா என்பதற்கு நிர்வாகம் பதில் சொல்ல வேண்டும். இத்திருக்கோவிலுக்கு மன்னர்களும், செல்வந்தர்களும், ஜமீன்தார்களும் பக்தர்களுக்காக வழங்கப்பட்ட ஏராளமான சொத்துக்களும், வருமானமும் இருந்து வரும் நிலையில் மீனாட்சி சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய வரும் ஏழை, எளிய பக்தர்களுக்கு கட்டணமில்லா பிரசாத பொருட்களை வழங்குவதை விட்டுவிட்டு தனியார் உணவகங்கள் போல் திருக்கோவிலில் பக்தர்கள் தலையில் பிரசாத பொருட்களின் விலையை ஏற்றுவதை எந்த விதத்தில் நியாயம்? இதற்காக தான் நம் முன்னோர்கள் திருக்கோயிலுக்கு சொத்துக்களை தானமாக வழங்கினார்களா?

அரசு கட்டுபாட்டில் இல்லாமலும் அரசுக்கு வருமானம் இல்லாத மற்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் அம்மதத்தை சார்ந்தவர்களுக்கு வாகனக் கட்டணம் உள்பட அனைத்து இலவச சலுகைகளும், வசதிகளும் செய்து கொடுக்கும் இந்த திராவிட மாடல் அரசு. திருக்கோயில் வருமானத்தை அரசு எடுத்து கொண்டு அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லும் இந்துக்களுக்கு மட்டும் எந்த ஒரு சலுகையும் வசதியும் இல்லாமல் பக்தர்களுக்கு கட்டுபாடு விதிப்பதும், பிரசாத பொருட்களின் விலையை ஏற்றுவதும் தான் திராவிட மாடல் அரசா? என்று அனைவருக்குமான மதசார்பற்ற அரசு என்று கூறி கொள்ளும் தமிழக முதல்வர் அவர்கள் இந்துக்களுக்கு விரோதமான அரசு என்று நிறுவிப்பது போல் தெரிகிறது.

எனவே உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயில் ஸ்தலத்தை வியபார ஸ்தலமாக மாற்றுவதை நிறுத்திவிட்டு இத்திருக்கோவிலில் பிரசாத பொருட்களின் விலை ஏற்றத்திற்கு பக்தர்களிடம் எந்த ஒரு கருத்தும் கேட்காமல் சபரிமலை சீசனை மனதில் வைத்து கொண்டு வியாபார நோக்கத்தோடு ஏழை, எளிய பக்தர்கள் வேதனை படுகின்ற வகையில் பிரசாத பொருட்களின் விலை உயர்வை மறுபரிசீலனை செய்து பக்தர்கள் அனைவரும் திருக்கோவிலின் பிரசாத பொருட்களை வாங்கி செல்லும் வகையில் பழைய விலைக்கு பிரசாத பொருட்களின் விலையை குறைக்க பக்தர்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சி அம்மன் திருக்கோவில் நிர்வாகத்திற்க்கும், தமிழக அரசுக்கும் இந்து மக்கள் கட்சி சார்பில் இக்கோரிக்கையை முன்வைக்கிறது. பிரசாதப் பொருட்களின் விலையை குறைக்கவில்லை என்றால் அறவழி மற்றும் சட்டப் போராட்டம் நடத்தப்படும்.” என்று அறிக்கையில் கூறப்படுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x