Last Updated : 18 Nov, 2025 02:07 PM

 

Published : 18 Nov 2025 02:07 PM
Last Updated : 18 Nov 2025 02:07 PM

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை திமுக அரசு தூண்டுகிறதா? - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பதில்

திருநெல்வேலி: ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக அரசு செய்கிறது என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் வ.உ.சியின் நினைவு தினத்தை ஒட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்ட பேரவை தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசியலில் இருப்பவர்கள் வஉசியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எஸ்ஐஆர் விவாகரத்தில் திமுகவுக்கு அச்சமில்லை.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அரசு செயல்படுகிறது. அதே நேரத்தில் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து உள்ளது. எஸ்ஐஆரை எதிர்த்து போராடுகிறோம் என்ற பெயரில் திமுகவை எதிர்த்து தமிழக வெற்றி கழகம் போராட்டங்களை நடத்தியுள்ளது.

எஸ்ஐஆரை எதிர்க்கிறோம் என்றால் உச்ச நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்து இருக்கலாம். மத்திய தேர்தல் ஆணையத்துக்கு மனுவை அனுப்பாமல் மாநில தேர்தல் ஆணையத்திற்கு மனுவை அனுப்பி உள்ளார். எஸ்ஐஆரை எதிர்க்கும் தமிழக வெற்றி கழகம் போராட்டம் வெறும் கண்துடைப்பு. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை மனதில் வைத்து செயல்படும் அவர்களது போராட்டத்தை மக்கள் நம்பவில்லை. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் அவர்கள் இருவரும் ஒன்றுபடுகிறார்கள்.

ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்கள் உரிமை. போராட்டத்தை தூண்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை. அவர்களுக்கு என்னவெல்லாம் நல்லது செய்ய வேண்டுமோ அதை எல்லாம் தமிழக அரசு செய்கிறது.

மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தியதும் மாநில அரசும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கியுள்ளது. மத்திய அரசு தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய நிதியை வழங்காமல் தமிழகத்தில் நிதி நெருக்கடியை உருவாக்க நினைக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x