Published : 18 Nov 2025 06:42 AM
Last Updated : 18 Nov 2025 06:42 AM
சென்னை: கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு, அண்ணா நகரில் ரூ.97 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கட்டிடம் மற்றும் மனை விற்பனை துறையை ஒழுங்குபடுத்தவும், மேம்படுத்தவும், மனை, அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான விற்பனையை வெளிப்படையான முறையில் உறுதி செய்வதற்கும், கட்டிட மனை விற்பனைத் துறையில் நுகர்வோர் நலனைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கும் தமிழ்நாடு கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TNREAT) தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குழுமத்துக்கு ரூ.97 கோடியில் அண்ணா நகரில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இக்கட்டிடம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 19,008 சதுர அடி கொண்ட இடத்தில் ரூ.77.60 கோடி செலவில், 56 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டது.
மேலும், ரூ.19.49 கோடி செலவில் இக்கட்டிடத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இங்கு பொதுமக்களுக்கான தகவல் மையம், வாகனம் நிறுத்துமிடம், வரவேற்பறை, காத்திருப்பு அறை, மின்தூக்கி வசதி, நவீன குளிர்சாதன வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், ஓய்வு பெற்ற தலைமை நீதிபதியும், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தலைவருமான எம்.துரைசுவாமி, ரெரா தலைவர் சிவ்தாஸ் மீனா, வீட்டுவசதித் துறை செயலர் காகர்லா உஷா, நிர்வாக உறுப்பினர் செல்வி அபூர்வா மற்றும் உறுப்பினர்கள் எல்.சுப்பிரமணியன், டி.ஜெகந்நாதன், வழக்கறிஞர் எம்.கிருஷ்ணமூர்த்தி, சுகுமார் சிட்டிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT