Published : 18 Nov 2025 06:42 AM
Last Updated : 18 Nov 2025 06:42 AM
சென்னை: தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் விரைவில் இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில அரசின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்று தமிழகத்தில் 470-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிமுறைகளை மீறி முறைகேடாக இணைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் ஜெ.பிரகாஷ், இணைப்பு அங்கீகாரப் பிரிவு துணை இயக்குநர் இளையபெருமாள் உட்பட 10 பேர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
பொதுவாக, பதிவாளர், துணை இயக்குநர் உள்ளிட்ட நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்கள் மூத்த பேராசிரியர்களாக இருப்பார்கள். அரசு ஊழியர் நடத்தை விதிமுறைகளின்படி, ஓர் அரசு ஊழியர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டால், அவர் உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்.
அந்த வகையில், தற்போது அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், அவர்களை இடைநீக்கம் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் உயர்கல்வித் துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுதான் பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறது. இந்த குழு மூலமாக 10 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த 10 பேரில் ஒருவரான முன்னாள் பதிவாளர் ஜெ.பிரகாஷ், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஆளுநர் மூலமாக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டவர். அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அவரை நீக்க ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT