Published : 18 Nov 2025 06:23 AM
Last Updated : 18 Nov 2025 06:23 AM
சென்னை: சென்னை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்றுமுதல் நவ.25-ம் தேதி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அனைத்து தொகுதிகளிலும் பிஎல்ஓ-க்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்களை வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண, வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களைக் கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், இன்று (நவ.18) முதல் 25-ம் தேதி வரை 8 நாட்களுக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களிலும், காலை 10 முதல் மாலை 6 மணி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படவுள்ளன.
இப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்களின் (பிஎல்ஏ) பங்கு இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதிசெய்ய, பிஎல்ஏக்கள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 நிரப்பப்பட்ட படிவங்களைப் பெற்று வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும்போது வாக்குச்சாவடி முகவர்கள், அப்படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது என உறுதியளிக்க வேண்டும். இந்த முகாம்களில் படிவங்களைப் பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், கணினி வசதி மூலம் வாக்காளர் விவரங்களை உடனடியாகச் சரிபார்த்து வழங்குதல் ஆகிய சேவைகள் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT