Published : 18 Nov 2025 06:12 AM
Last Updated : 18 Nov 2025 06:12 AM
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறை, வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியலில் வேறுபாடுகள் இருப்பதால், இரு துறை அதிகாரிகளும் ஆவணங்கள் அடிப்படையில் கோயில் சொத்துகளை உறுதிப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை மீட்டு முறையாகப் பராமரிக்கவும், மீனாட்சியம்மன் கோயிலில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு, விரைவில் குடமுழுக்கு நடத்தக் கோரியும், சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, கோயில் சொத்துகள் தொடர்பாக அறநிலையத் துறையும், வருவாய்த் துறையும் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை, வருவாய்த் துறை சார்பில் மீனாட்சியம்மன் கோயில் சொத்துகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், மீனாட்சியம்மன் கோயில் சொத்துப் பட்டியலும், வருவாய்த் துறை சமர்ப்பித்த சொத்துப் பட்டியலும் பொருந்தவில்லை. இந்தப் பட்டியலை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரு துறைகளின் பட்டியல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள மீனாட்சியம்மன் கோயில் சொத்துகளை அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர், வருவாய்த் துறையினர் ஆவணங்களின் அடிப்படையில் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக நவ. 22-ல் கூட்டம் நடத்தி, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மனுதாரர் தரப்பில், “கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உணவு வழங்க யானை மண்டபம் பகுதியில் உணவு சமைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “பழமையான கோயில்களின் பழமை மற்றும் பாரம்பரியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
கோயிலில் வணிக நோக்கில் பக்தர்களுக்கு உணவு வழங்குவது உணவகம் நடத்துவதைப் போன்றதுதான். கோயில் புனரமைப்புப் பணிகள் யுனெஸ்கோ வழிகாட்டுதலின் அடிப்படையில் நடக்கிறதா என்பது குறித்து அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவ.26-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT