Published : 18 Nov 2025 07:13 AM
Last Updated : 18 Nov 2025 07:13 AM
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவரான அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சேலம் வரும்போது மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம். கூட்டணி கட்சி தலைவரான பழனிசாமி, மாநிலம் முழுவதும் 173 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சென்று மக்களின் எண்ணங்களை மிகத் தெளிவாக பிரதிபலித்திருக்கிறார். திமுக-வுக்கு தமிழகத்தில் எதிர்மறை வாக்குஅதிகரிக்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மக்களுக்கு கொடுத்த விழிப்புணர்வு தான் காரணம்.
தமிழகத்தை 4 மண்டலங்களாகப் பிரித்து மண்டலம் வாரியாகச் சென்று, இயக்க பணி, மக்கள் பணி, கூட்டணி என்று செயலாற்றி, வரும் தேர்தலில் வெல்லக்கூடிய சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அதிமுக பொதுச்செயலாளரை இன்று நேரடியாக சந்தித்து அரசியல் பயணங்கள், பிரகாச
மான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்தேன். எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தமிழகத்தில் முதல் பெரிய கட்சியாக அதிமுக விளங்குகிறது.
அதேபோல, மத்தியில் பெரிய கட்சியாக பாஜக உள்ளது. இந்த 2 கட்சிகள் மீதும் தமிழக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசோடு இணக்கமான சூழல் அதிமுக-வுக்கு இருக்கும்போது, தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். சாதி, மதம், மொழி, இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு இன்னும் பல கட்சிகள் எங்களோடு கூட்டணி சேருவதற்கான கால நேரம் உருவாகியுள்ளது.
தேர்தல் முறையாக நடக்க வேண்டுமென்றால், தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகள் மிக முக்கியம். மக்கள் நியாயமாக தேர்தல் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்து இருப்பதை தினம்தோறும் தொலைக்காட்சியிலும் பத்திரிகைகளிலும் வரும் செய்திகளே எடுத்துக்காட்டுகின்றன. போதைப் பொருள், டாஸ்மாக் இவை தான் குற்றங்கள் நடக்கக் காரணம். குற்றங்கள் பெருகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த இயலாத அரசாக திமுக அரசு இருக்கிறது.
ஒரு வாரத்துக்கு முன்பு கோவையில் மாணவிக்கு நடந்த கொடுமை குறித்து தமாகா விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இந்த ஆட்சி பெண்களால், மாணவி
களால் முடிவுக்கு வரும். எஸ்ஐஆர்-ஐ திமுக எதிர்த்து வருகிறது. ஆனால் தவெக, அதில் திருத்தங்கள் வேண்டும் என்கிறது. திருத்தங்கள் வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் கிடைத்த ஒட்டுமொத்த வெற்றியும் தமிழகத்திலும் எதிரொலிக்க அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT