Published : 18 Nov 2025 07:04 AM
Last Updated : 18 Nov 2025 07:04 AM
சென்னை: தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மாநில நிர்வாகிகளுடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். பிஹார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் காங்கிரஸின் செயல்பாடு மற்றும் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் தயார் நிலை குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோருடன் நேற்று முன்தினம் டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக மாநில தலைவர்கள், மேலிட பொறுப்பாளர்கள், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டம் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் பிஹாரில் வாக்கு திருட்டு மற்றும் எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்போதைய நிலை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் என்பது பொறுமையாக, நீண்ட காலம் செய்ய வேண்டிய பணி. இந்தப் பணியை அவசரப்பட்டு செய்வதால், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். எனவே சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பின்பு, எஸ்ஐஆர் நடத்தலாம் என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடு.
எஸ்ஐஆரை எவ்வாறு நிரப்ப வேண்டும் என்று பல பிஎல்ஓ அதிகாரிகளுக்கே தெரியவில்லை. 2005-ல் நடந்ததை இப்போது கேட்டால், அதற்கான தரவுகள்யாரிடம் இருக்கிறது? எங்கு போய் கேட்பது? இதில் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. மக்களுக்காகத்தான் தேர்தல் ஆணையம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT