Published : 18 Nov 2025 06:47 AM
Last Updated : 18 Nov 2025 06:47 AM
புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி, எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி வருவதாக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதையடுத்து, உச்ச நீதிமன்றமே தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி சட்டமாக்கியது.
உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு: இந்நிலையில், துணைவேந் தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கும் தமிழக அரசின் சட்டப் பிரிவுகளை எதிர்த்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞரான கே.வெங்கடாச்சலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து கடந்த மே மாதம் உத்தரவிட்டனர்.
இந்த தடையை நீக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.எம்.பக்க்ஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு: அப்போது யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘இதுதொடர் பான மசோதாக்களுக்கு கெடு விதித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க வேண்டும்’’ என்றார். அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பி. வில்சன், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர், ‘‘இந்த வழக்குக்கும், மசோதாக்களுக்கு கெடு விதித்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
துணைவேந்தர்கள் நியமன சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையால் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லாமல் மாணவர்களின் உயர் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்’’ என்றனர். அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை டிச.2-ம் தேதிக்குத் தள்ளிவைத் துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT