Published : 18 Nov 2025 06:42 AM
Last Updated : 18 Nov 2025 06:42 AM
“திருச்சி - மதுரை இடையே மேற்கொள்ளும் நடைபயணத்தின்போது, திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் திருச்சியிலிருந்து மதுரை வரை ஜன. 2 முதல் 12-ம் தேதி வரை சமத்துவ நடைபயணம் நடைபெற உள்ளது. நடைபயணத்தில் பங்கேற்க உள்ள இளைஞர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை மதுரையில் வைகோ நேற்று நடத்தினார்.
முன்னதாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: மது, போதைப் பொருட்களால் பள்ளி - கல்லூரி மாணவர்களும், பெண்களும் பாதிக்கப்படுகின்றனர். கல்லூரிகளில் சாதி சங்கங்களால் மாணவர்கள் இடையே மோதல் போக்கு உள்ளது. இவற்றை பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் தடுக்க வேண்டும். கல்லூரிகளில் நட்பு, சமூக உணர்வு வளர வேண்டும். மது, போதையை ஒழிக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மது, போதைப்பொருள் ஒழிப்பு, சாதி சங்கங்களுக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியிலிருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். அப்போது திராவிட இயக்கத்தை பாதுகாக்க திமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளேன். திருச்சியில் எனது நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மதுரையில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பங்கேற்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் இறுதியில் செய்தியாளர்கள் கேட்ட சில அரசியல் கேள்விகளால் அதிருப்தியடைந்த வைகோ, ‘‘அரசியல் பேசுமிடம் இது அல்ல. நான் அதற்காகவும் இங்கு வரவில்லை. அரசியல் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப்போவதில்லை. விதண்டாவாதமான கேள்விகளை கேட்கக்கூடாது. அதற்கு பதிலளிக்க மாட்டேன். நான் உங்களை இங்கு வரச்சொல்லவில்லை. நான் சொல்வதைப் போட்டால் போடுங்கள். இல்லையெனில் புறப்படுங்கள்” என்றவர், ”எங்களைப் பற்றி டிவி விவாதங்களில் கூட யாரும் விவாதிப்பதில்லை. அதை நானும் பொருட்படுத்துவதில்லை” என்று விரக்தியை வெளிப்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT