Published : 17 Nov 2025 03:11 PM
Last Updated : 17 Nov 2025 03:11 PM
சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சுதர்சனம், பவாரியா கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம், நவ.21-ம் தேதிக்கு அறிவிக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ-வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ம் தேதி அதிகாலை 2.45 மணிக்கு, பெரியபாளையம் அருகே தானாக்குளத்தில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்து புகுந்த 5 பேர் கும்பல், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, அவரது மனைவி மற்றும் மகன்களை தாக்கி, 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
தனது கட்சி எம்எல்ஏ கொல்லப்பட்டது குறித்து அறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கொள்ளையர்களைச் சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மிகத் தீவிரமாகச் செயல்பட்ட தனிப்படை, அடுத்த மாதத்திலேயே கொள்ளையர்கள் யார் எனக் கண்டுபிடித்தது.
முக்கியக் குற்றவாளியை பிப்ரவரி 1-ம் தேதி கைது செய்தது. தொடர் துப்பு துலக்கி மார்ச் மாதத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். செப்டம்பரில் முக்கியக் குற்றவாளிகள் இருவர் வடமாநிலத்தில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர்.
ராஜஸ்தானில் பவாரியா கொள்ளையர்களை ஜாங்கிட் குழுவினர் பிடித்த சாகசக் கதை பின்னர் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமாக வெளிவந்தது. தனிப்படை போலீஸார், 32 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீன் பெற்ற மூன்று பெண்கள் தலைமறைவாகி விட்டனர். கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் பவாரியா உள்பட இருவர் சிறையிலேயே இறந்துவிட்டார்.
மீதமுள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜெயில்தார் சிங் ஆகிய நான்கு பேருக்கு எதிரான வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார்.
வழக்கில், 86 பேர் காவல் துறை சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்த நிலையில், ஜெகதீஷ் உள்பட நான்கு பேருக்கு எதிரான இந்த வழக்கில் நவம்பர் 21-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT