Published : 17 Nov 2025 12:29 AM
Last Updated : 17 Nov 2025 12:29 AM
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக ஐஎன்டியுசி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில்தலைவராக மு.பன்னீர்செல்வம், செயலாளராக கோவை செல்வம் வெற்றி பெற்றனர்.
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்ஸின் தமிழக ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் தேர்தலை, ஐஎன்டியுசி சட்ட விதிகள்படி நடத்தும்படி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் முகமத் ஷஃபி ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக ஐஎன்டியுசி அவசர செயற்குழு கூட்டம், கடந்த அக்.31-ம் தேதி நடந்தது.
இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 16-ம் தேதி தேர்தல்நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட நடைமுறைகள் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மற்றோரு பிரிவினர் மதுரையில் நவ.15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தனர். இந்த போட்டி தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் போட்டித் தேர்தலுக்கு தடை விதித்தது. மேலும் 16-ம் தேதி செங்கல்பட்டில் நடக்கும் தேர்தலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தமிழக ஐஎன்டியுசியின் தலைவர் உள்பட அனைத்து நிர்வாகிகளின் தேர்தல் நீதிமன்ற உத்தரவுப்படி திருப்போரூர் வடக்கு மாடவீதியிலுள்ள எல்லாம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி, ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அலுவலர் சோமசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில், ஐஎன்டியுசியின் மூத்த உறுப்பினர்கள் ஏ.கல்யாண்ராமன், எஸ்.லிங்க மூர்த்தி, எம்.ஆறுமுகம், எம்.நந்தகுமார் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்தினர்.
இதில் வாக்களிக்க தகுதியான 1,810 பேரில் 1,740 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மு.பன்னீர் செல்வம் 1,394 வாக்குகளும், செகரட்ரி ஜெனரல் பதவிக்கு கோவை செல்வம் 1,135 வாக்குகளும், பொரு
ளாளர் வாழப்பாடி ராம கர்ணன் 958-வாக்குகளும், பொதுச் செயலாளர்களாக வெங்கடேஷ்-296, லலிதா சுந்தரமகாலிங்கம் 268, கருப்பையா-230, வழக்கறிஞர் சரவணன் 224, ராஜேஸ்வரி 201 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். செயற்குழு உறுப்பினர் 30 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு விஷ்ணுபிரசாத் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT