Published : 17 Nov 2025 12:04 AM
Last Updated : 17 Nov 2025 12:04 AM
சென்னை: பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அப்படிவங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி மொழி அளிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பிஎல்ஓ-க்கள் எஸ்ஐஆர் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இப்பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு முடிக்க அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் பங்கானது இன்றியமையாதது. அரசியல் கட்சிகளின் முழுமையான பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தனது கடந்த அக்.27-ம் தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிஎல்ஏ-க்கள், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முன்பு வரை நாள்தோறும் அதிகபட்சம் 50 எண்ணிக்கையிலான நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை பெற்று வழங்க அனுமதி அளித்து உள்ளது.
தண்டனைக்குரியது: அவ்வாறு படிவங்களை சமர்ப்பிக்கும்போது பிஎல்ஏக்கள் "என்னால் வழங்கப்படும் இந்த தகவல்கள் அனைத்தும் என் பாகத்துக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியல் உடன் சரிபார்க்கப்பட்டது என உறுதி அளிக்கிறேன். தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1950, பிரிவு 31-ன் படி தண்டனைக்கு உரியது என்பதையும் நான் அறிவேன்" என்ற உறுதிமொழியையும் இணைத்து அலுவலர்கள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு பெறப்படும் படிவங்களை பிஎல்ஓக்கள் சரிபார்த்து அவற்றை டிஜிட்டல் வடிவமாக தொடர்புடைய உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு சமர்ப்பிப்பார். வாக்காளர் பதிவு அலுவலர் அப்படிவங்கள் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT