Last Updated : 16 Nov, 2025 10:56 AM

1  

Published : 16 Nov 2025 10:56 AM
Last Updated : 16 Nov 2025 10:56 AM

என்.ஆர். காங். தொகுதியையும் கூடுதலாக குறிவைக்கும் பாஜக: காரைக்கால் என்டிஏ கூட்டணி களேபரங்கள்

விக்னேஸ்வரன், சந்திரபிரியங்கா, ஜி.என்.எஸ்.ராஜசேகரன்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள். இதில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் வசமுள்ள முன்னாள் அமைச்சரின் தொகுதி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு குறிவைத்திருக்கிறது பாஜக. காரைக்கால் பிராந்தியத்தில் காரைக்கால் தெற்கு, வடக்கு, திருநள்ளாறு, நெடுங்காடு (தனி), நிரவி-திருப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இவற்றில் தற்போது காரைக்கால் தெற்கும், நிரவி-திருப்பட்டினமும் திமுக வசம் உள்ளன. காரைக்கால் வடக்கு, நெடுங்காடு தொகுதிகள் என்.ஆர்.காங்கிரஸ் வசமும், திருநள்ளாறு தொகுதி சுயேச்சை வசமும் உள்ளன.

இதில், நிரவி-திருப்பட்டினம், திருநள்ளாறு தொகுதிகளில் கடந்த முறை பாஜக போட்டியிட்டு தோற்றுப் போனது. இருப்பினும் இம்முறையும் அந்தத் தொகுதிகளை தனது லிஸ்ட்டில் வைத்திருக்கிறது. திருநள்ளாறில் போட்டியிட்டு தோல்வியடைந்த தொழிலதிபர் ஜி.என்.எஸ்.ராஜசேகரனுக்கு மேலிட செல்வாக்கால் இப்போது நியமன எம்எல்ஏ-வாக இருக்கிறார். இந்த நிலையில், இம்முறை மீண்டும் இவர் திருநள்ளாறை குறிவைத்து களப்பணிகளை செய்து வருகிறார். அதேசமயம் இம்முறை காரைக்காலில் கூடுதலாக ஒரு தொகுதிக்கும் பிராக்கெட் போடுகிறது பாஜக.

தற்போது என்.ஆர்.காங்கிரஸ் வசம் உள்ள நெடுங்காடு (தனி) தொகுதியில் முன்னாள் அமைச்சரும் முதல்வர் ரங்கசாமியின் விசுவாசியுமான சந்திரகாசுவின் மகள் சந்திரபிரியங்கா இப்போது இரண்டாவது முறையாக எம்எல்ஏ-வாக இருக்கிறார். ரங்கசாமி அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்த இவர், அரசியல் நெருக்கடிகள் காரணமாக 2023 அக்டோபரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், இம்முறை நெடுங்காடு தொகுதியில் போட்டியிட பாஜக மருத்துவரணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் சிபாரிசுக்கு ஆள்பிடித்து வருகிறார். முன்பு திமுக-வில் இருந்த இவர் கடந்த தேர்தலில் கட்சி தனக்கு வாய்ப்பளிக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றார்.

அதன் பிறகு பாஜக-வில் இணைந்த இவருக்கு குறுகிய காலத்திலேயே மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், அண்மையில் நெடுங்காடு பகுதியில் நடைபெற்ற எஸ்ஐஆர் திருத்தப்பணி பயிற்சி முகாமில் பேசிய பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, "இந்தத் தொகுதியை மனதில் வைத்து கட்சியினர் இப்போதிருந்தே மிகக் கடுமையாக உழைக்க வேண்டும்” என பாஜக நிர்வாகிகளுக்கு கோடிட்டுக் காட்டிச் சென்றார்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காரைக்கால் பாஜக-வினர், “நிச்சயம் இம்முறை காரைக்காலில் நெடுங்காடு உள்ளிட்ட 3 தொகுதிகளில் பாஜக போட்டியிடும். புதுச்சேரி பிராந்தியத்தில் ஏதாவது ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்தாவது நெடுங்காடு தொகுதியை பாஜக கேட்டு வாங்கும்” என்றனர்.

பாஜக மூவ்களால் நெடுங்காடு இம்முறை தனக்குக் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் இதுகுறித்து கேட்டதற்கு, "பாஜக-வினர் தங்கள் கட்சியை வளர்க்கும் நோக்கில் இப்படிப் பேசி வருகின்றனர்.

தங்களுக்கு எங்கெல்லாம் போட்டியிட ஆட்கள் இருக்கிறார்களோ அந்தத் தொகுதிகளை எல்லாம் தங்களுக்குக் கேட்போம் என பேசி வருகின்றனர். ஆனால், யார் என்ன சொன்னாலும் யார் எங்கே போட்டியிடுவது என்பது குறித்தெல்லாம் கூட்டணிக்கு தலைவரான எங்கள் கட்சியின் தலைவர் தான் முடிவெடுப்பார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x