Published : 16 Nov 2025 07:26 AM
Last Updated : 16 Nov 2025 07:26 AM

டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி

எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியதாவது: பிஹார் தேர்தலுக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தமில்லை. அதனால் அம்மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று சொல்வதை நான் நம்பவில்லை.

எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்படி இருந்தாலும் தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சி. தமிழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் தான் எஸ்ஐஆர் பணிகளைமேற்கொண்டு வருகிறார்கள். அப்படி இருக்கையில், அனைத்துக் கட்சிகளும் விழிப்புடன் இருக்கும்போது தேர்தல் ஆணையம் என்ன செய்துவிட முடியும்?

அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருப்பவர்களோடு தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கிறோம். பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காகத்தான் அமமுக-வே தொடங்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. கூட்டணி தொடர்பாக எங்களோடு சில கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன. அநேகமாக டிசம்பர் அல்லது ஜனவரியில் ஒரு முடிவு தெரிந்துவிடும்.

டிடிவி.தினகரன் தான் தவெக கூட்டணிக்கு முயற்சித்து வருவதாக டிவி விவாதங்களில் சிலர் அவர்களுடைய ஆசைக்குப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அதில் உண்மைஇல்லை. நான் பலமுறை சொன்னதைப் போல, நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால், கூட்டணி தொடர்பாக எங்களோடு சில கட்சிகள் பேசிக்கொண்டு இருக்கின்றன. அது எந்தக் கட்சிகள் என்று இப்போது சொல்வது நாகரிகமாக இருக்காது. அதேசமயம், எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது.

2016 தேர்தல் என்பது வேறு 2026 தேர்தல் என்பது வேறு. இந்தத் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் தான் கடுமையான போட்டி இருக்கும். எங்களைப் பொறுத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பது தான்நிலைப்பாடு. 2021 தேர்தலில் கூட்டணி அமையாது என்று தெரிந்திருந்தும், டெல்லியில் உள்ள மூத்த தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் அவர்கள் மீதுள்ள மரியாதை காரணமாக, “அமமுக-வுக்கு 40 தொகுதிகள் தருவதாக இருந்தால் கூட்டணி பேசத் தயார்” என்று சொன்னோம். ஆனால், துரோகம் செய்த காரணத்தால், பழனிசாமிக்கு எங்களைச் சந்திக்கவே அப்போது தயக்கம் இருந்தது.

அதனால் நாங்கள் எதிர்பார்த்தபடியே அப்போது என்டிஏ கூட்டணியில் நாங்கள் இடம்பெற முடியவில்லை. அப்போது தேமுதிக-வுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட எங்களால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், யார் ஆட்சிக்குவரக்கூடாது என்று நினைத்தோமோ... எந்த துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தோமோ அது நடந்தது. இந்த முறையும் எங்களது முதல் இலக்கு, துரோகத்தை தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் இனியாருமே நினைத்துப் பார்க்கக் கூடாது என்பதை நிலைநிறுத்துவது தான்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x