Published : 16 Nov 2025 12:37 AM
Last Updated : 16 Nov 2025 12:37 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடாக அங்கீகாரம் வழங்கியது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உள்பட 17 பேர் மீது லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதற்கிடையே 224 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 353 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.
மேலும், விதிமுறைகளை பின்பற்றாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கல்லூரிகளில் ஆய்வு செய்தபோது, எஸ்.மாரிச்சாமி என்ற பேராசிரியர் 11 கல்லூரிகளில் பணிபுரிவதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், ஆய்வுக்குழு ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு கல்லூரிகளை ஆய்வு செய்தபோது, ஒய்.ரவிக்குமார் என்ற பேராசிரியர் இரு கல்லூரிகளிலும் பணியில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும், உரிய ஆய்வு நடைமுறைகளை பின்பற்றாததும்தான் காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்கள் மற்றும் தொடர்புடைய கல்லூரிகளிடமும் இந்த குழு விசாரணை நடத்தியது. இந்நிலையில், விதிமுறைகளைப் பின்பற்றாமல் லஞ்சம் பெற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கியதாக அண்ணா பல்கலை. முன்னாள் இயக்குநர் (அங்கீகாரத் துறை) இளையபெருமாள், துணை இயக்குநர்கள் (அங்கீகாரத் துறை) சித்ரா,சீலோவா எலிசபெத், முன்னாள் பதிவாளர் ஜி.ரவிக்குமார், தற்போதைய பொறுப்பு பதிவாளர் ஜே.பிரகாஷ், தற்போதைய இயக்குநர் வி.ஆர்.கிரிதேவ், அண்ணா பல்கலை. (கோவை) துணை இயக்குநர் எஸ்.மார்ஷல் அந்தோணி, அண்ணா பல்கலை. (மதுரை) துணை இயக்குநர்வி.மாலதி, அண்ணா பல்கலை.(திருச்சி) துணை இயக்குநர் எஸ்.பிரகதீஸ்வரன், அண்ணா பல்கலை. (நெல்லை) துணை இயக்குநர் எஸ்.சிலஸ் சற்குணம் உள்ளிட்ட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதேபோல், எஸ்.மாரிச்சாமி, எஸ்.கண்ணன், ஒய்.ரவிக்குமார் ஆகிய பேராசிரியர்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த
4 தனியார் கல்லூரிகள் என மொத்தம் 17 பேர் மீது குற்றச்சதி, ஏமாற்றுதல், அரசு ஊழியரால் நம்பிக்கை மோசடி, ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த முறைகேடுகள் மூலம் அங்கீகாரம் பெறுவதற்கான தகுதி இல்லாத கல்லூரிகளுக்கு அதிகாரிகள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்றும், இது மாணவர்களின் கல்வித் தரத்தை பாதிப்பதாகவும், இதுதொடர்பாக புலன் விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT