Published : 16 Nov 2025 12:07 AM
Last Updated : 16 Nov 2025 12:07 AM
புதுச்சேரி: வாக்குத் திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிஹார் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: பிஹாரில் வரலாறுகாணாத வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார்.
வாக்குத் திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை பிஹார் மக்கள் நிராகரித்துவிட்டார்கள். ராகுல் பிரச்சாரத்துக்கு சென்ற இடங்களில் எல்லாம் காங்கிரஸ் தோற்றுப் போயிருக்கிறது. 2026-ல் தமிழத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்போது, மக்களின் மனநிலை பிரதமர் மோடியை நோக்கிச் சென்றுவிட்டதை ஸ்டாலின் உணர்வார்.
புதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. பாஜகவுடன் இணைந்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, பல்வேறு நல்ல விஷயங்களை செய்திருக்கிறது.
பிஹாரிலும், புதுச்சேரியிலும் ‘இரட்டை இன்ஜின்’ வேலை வென்றிருக்கிறது. இதேபோல, தமிழகத்துக்கும் ‘இரட்டை இன்ஜின்’ அரசு தேவை. 2026 தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் அனைத்து இடங்களிலும் தேஜகூ மாபெரும் வெற்றியைப் பெறும். காங்கிரஸ் கட்சி பலமுறை உடைந்து தற்போது சிறிய கட்சியாக மாறிவிட்டது. அதேநேரத்தில், மக்களின் அன்பைப் பெற்று பாஜக மிகப் பெரிய கட்சியாக மாறியிருக்கிறது.
வாக்குத்திருட்டை முன்வைத்த அனைவருக்கும் பிஹாரில் ஃபெயில் மார்க் கிடைத்திருக்கிறது. இதேநிலைதான் தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்படும். தவெக தலைவர் விஜய் பேசும் எதிர்ப்பு அரசியலை மட்டுமே பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.
மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். பாஜக எதிர்ப்பு அரசியல் நிலைக்கு விஜய் சென்று விட்டார். புதிதாக கட்சி
தொடங்கியதால் மட்டுமே வெற்றி பெற்று விட முடியாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT