Published : 15 Nov 2025 11:04 AM
Last Updated : 15 Nov 2025 11:04 AM
சென்னை: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டுள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. மெகா கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இந்நிலையில் பிஹார் தேர்தல் முடிவு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பிஹார் சட்டமன்றத் தேர்தல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமாருக்கு எனது பாராட்டுகள். பிஹார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஓயாமல் பரப்புரை மேற்கொண்ட இளந்தலைவர் தேஜஸ்வி யாதவுக்கும் எனது பாராட்டுகள்.
நலத் திட்ட விநியோகம், சமூக - கொள்கைக் கூட்டணிகள், நாம் சொல்ல வேண்டிய அரசியல் ரீதியான செய்தியைத் தெளிவாக மக்களிடம் சொல்வது, இறுதி வாக்குப் பதிவாகும் வரை அர்ப்பணிப்புடன் தேர்தல் பணியாற்றுவது எனப் பலவற்றையும் ஒரு தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இண்டியா கூட்டணியில் உள்ள அனுபவமிக்க தலைவர்கள் இத்தகைய செய்தியை உணரவும், இனி எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுக்கவுமான ஆற்றலைப் பெற்றவர்கள்.
அதேவேளையில், இத்தேர்தல் முடிவுகள் தேர்தல் ஆணையத்தின் குளறுபடிகளையும் பொறுப்பற்ற செயல்களையும் இல்லாமல் ஆக்கிவிடாது. தேர்தல் ஆணையத்தின் மீதான மரியாதை இதுவரை இல்லாத அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. வலுவான, நடுநிலையான தேர்தல் ஆணையத்தைக் கோருவது நம் நாட்டு மக்களின் உரிமை. தேர்தலில் வெற்றி பெறாதோரின் நம்பிக்கையையும் பெறும் அளவுக்கு தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தல்களை நடத்திட முன்வர வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT