Published : 15 Nov 2025 06:05 AM
Last Updated : 15 Nov 2025 06:05 AM
சென்னை: சென்னை பெரியமேட்டில் ரூ.3.86 கோடியில் சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம், ரூ.5.24 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நூலகம், முதல்வர் படைப்பகம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை - எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேப்பேரி உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு சேவைகள் வழங்கி வரும் பெரியமேடு சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு ரூ.3.86 கோடி செலவில் 6,200 சதுர அடி நிலப்பரப்பில் தரை மற்றும் 2 தளங்களுடன், பல்வேறு வசதிகளுடன் பெரியமேடு சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில், 30 முதல்வர் படைப்பகங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, கொளத்தூர், பெரியார் நகர் நூலகம் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு, முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார் இதன் தரைத்தளத்தில் 75 இருக்கைகளுடன் கூடிய நூலகம், முதல் தளத்தில் 85 இருக்கைகள் கொண்ட கற்றல் மையம், 60 இருக்கைகள் கொண்ட பயிற்சிக் கூடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 70,000 புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, மின்வழி கற்றல், இலவச இணையதள இணைப்பு, சிற்றுண்டியகம், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும், மாணவர்கள், போட்டித் தேர்வர்களுக்கு தேவையான வசதிகளும் உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் கொளத்தூர், கார்த்திகேயன் சாலையில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் ரூ.68 லட்சம் மதிப்பில் புதிதாக பெரவள்ளூர் புற காவல் நிலையம் கட்டும் பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, சிஎம்டிஏ சார்பி்ல், ரூ.11.37 கோடி மதிப்பீட்டில், சிவஇளங்கோ சாலையில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம் கட்டும் பணியை பார்வையிட்ட முதல்வர், பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். மேலும், கொளத்தூர், ஜெகந்நாதன் தெருவில், ரூ.11.74 கோடியில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மறுவாழ்வு மையக் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT