Last Updated : 14 Nov, 2025 02:56 PM

1  

Published : 14 Nov 2025 02:56 PM
Last Updated : 14 Nov 2025 02:56 PM

‘பிஹாரில் இண்டியா கூட்டணி தோல்விக்கு இதுவே காரணம்...’ - நயினார் விளக்கம்!

திருநெல்வேலி: தேர்தல் ஆணையத்தின் மீது அவதூறு கற்பித்தவர்களை பிஹார் மக்கள் புறக்கணித்துவிட்டனர் என்று நெல்லையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்தார்.

பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றி குறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிஹார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 190 இடங்களில் முன்னணியில் உள்ளது. இது மாபெரும் வெற்றி. அந்த மாநிலத்தில் ஏற்கெனவே நடந்த நல்லாட்சியை மக்கள் அங்கீகரித்துள்ளனர்.

தொடர்ந்து. இண்டியா கூட்டணியை மக்கள் புறக்கணித்துக் கொண்டே வருகிறார்கள். இண்டியா கூட்டணிக்கு தேசிய அளவில் தொடர் தோல்விகள் ஏற்பட்டுள்ளது. அடுத்து, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டணி அபார வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் ஒரு தனிப்பட்ட அமைப்பு. அமலாக்கத் துறை (ED) ஒரு தனிப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறை (IT) ஒரு தனிப்பட்ட அமைப்பு. இவற்றை, அரசியல் கட்சியுடன் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோது, தேர்தல் ஆணையம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது? திமுக ஜெயித்தால், தேர்தல் ஆணையம் நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம். தோற்றுவிட்டால் தேர்தல் ஆணையம் ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று அர்த்தமா?

இது முற்றிலும், சந்தர்ப்பவாத அரசியல். தேர்தல் ஆணையத்தின் மீது அவதூறு பரப்பியவர்களை பிஹார் மக்கள் புறக்கணித்துள்ளனர். அங்கு இண்டியா கூட்டணி தோல்விக்கு இதுவே முக்கிய காரணம். இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது . மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவ்வளவுதான்," என்றார்.

மேலும் இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து சதித் திட்டங்களையும் பொய் பிரச்சாரங்களையும் தவிடுபொடியாக்கி, மகாத்மா புத்தர் ஞானம் பெற்ற பிஹார் மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தேசிய ஜனநாயகக் கூட்டணி.

கடந்த ஆட்சிக் காலத்தில் "டபுள் இன்ஜின் சர்காராக" நமது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான மாநில அரசும் வாரி வழங்கிய வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு மகிழ்ந்த பிஹார் மக்கள் இந்தத் தேர்தலின் போதும் மாபெரும் வெற்றியை நமக்குப் பரிசளித்திருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நேர்மைக்குக் கிடைத்த வெற்றி.

அதிலும் மத்திய அமைச்சர் சிராக்பாஸ்வானின் முக்கியப் பங்களிப்பு பிஹார் கோட்டையில் நமது NDA-வின் வெற்றிக்கொடியை வலுப்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதும், தேர்தலில் தோல்வியடையும் பொழுது அதே தேர்தல் ஆணையத்தைச் சாடுவதும்தான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், எவ்வித குறுக்கு வழியையும் பயன்படுத்தாமல் மக்கள் சேவையில் மட்டுமே தங்களை முன்னிறுத்தி மக்களின் பேராதரவுடன் வெற்றிப் பாதையில் வீறு நடைபோடும் பாஜக எனும் பெரும் சக்தியின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கியே.

ஆடத் தெரியாதவன் தெரு கோணல் என்று சொல்லும் கதையாக, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைக்க முடியாத அரைகுறைகள் தான் தேர்தல் ஆணையத்தின் நேர்மையைக் குறை சொல்வார்கள். தேர்தல் ஆணையம் நடத்திய தேர்தலின் மூலம் கிடைத்த எம்பி மற்றும் எம்எல்ஏ உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்து கொண்டு அதே தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகக் கற்களை வீசும் ஆட்கள் செக்கிற்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x