Published : 14 Nov 2025 06:07 AM
Last Updated : 14 Nov 2025 06:07 AM
சென்னை: தமிழகத்தில் ரூ.62.51 கோடியில் 12 புதிய தோழி விடுதிகள், ரூ.27.90 கோடியில் கோவை, திருச்சியில் அரசினர் கூர்நோக்கு இல்ல புதிய கட்டிடங்கள் கட்டும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தலைமைச் செயலகத்தில் சமூகநலத் துறை சார்பில் திருப்பத்தூர், நாமக்கல், மயிலாடுதுறை, விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ரூ.62.51 கோடி மதிப்பில், 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அதேபோல், கோயம்புத்தூர் - ‘பூஞ்சோலை’ அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்துக்கு ரூ.27.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும், சென்னை, ராயபுரம் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
சுகாதாரத் துறை
சுகாதாரத் துறை சார்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக 196 உதவியாளர் மற்றும் 18 வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியிடத்துக்கும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 19 திறன்மிகு உதவியாளர்-II (பொருத்துநர்– II) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், மகளிர் நல்வாழ்வுக்காக ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் மேமோகிராபி, இசிஜி கருவி, செமி-ஆட்டோ அனலைசர் (Semi-autoanalyser) உட்பட பல வசதிகளுடன் ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியையும் பார்வையிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT