Published : 14 Nov 2025 06:22 AM
Last Updated : 14 Nov 2025 06:22 AM
சென்னை: தமிழகத்தில் உள்ள பாரம்பரிய, தொல்லியல் சிறப்பு மிக்க கோயில்களை பாதுகாக்கும் வகையில் மாநில அளவில் புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பாக வணிகவளாகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆலய வழிபாட்டு குழுத் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் புராதன, தொல்லியல் சிறப்பு மிக்க கோயில்களையும், அவற்றின் கட்டுமானங்களையும் பாதுகாக்கும் வகையில் மாநில புராதன சின்னங்கள் ஆணையத்தை 4 வார காலத்துக்குள் அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கடந்த அக்.9 அன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், ” மாநில அளவிலான புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது என்றும், இப்பணி மூன்று மாதங்களில் முடிக்கப்பட்டு ஆணையம் அமைக்கப்படும்.
மேலும் வரும் டிச.3-ம் தேதியன்று திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திரளக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான தரிசன ஏற்பாடுகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரினார்.
அதையடுத்து நீதிபதிகள், திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழகத்தின் பிற புராதன சிறப்பு மிக்க கோயில்களிலும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டியது அவசியமானது. அதற்கு மாநில அளவிலான புராதன சின்னங்கள் ஆணையம் அமைப்பது அத்தியாவசியமானது. அந்த ஆணையம் அமைக்கப்படும் வரை திருவண்ணாமலையில் மேற்கொண்டு எந்தவொரு கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாது என தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், புராதன சின்னங்கள் ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு ஒருமாத காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு தற்காலிகமாக திருவண்ணாமலையில் தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ள அறநிலையத்துறைக்கு அனுமதியளி்த்து விசாரணையை வரும் டிச.18-க்கு தள்ளி வைத்தனர்.
இதேபோல சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையி்ல் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த பிரச்சினைக்கு பொது தீட்சிதர்கள் தான் தீர்வு காண வேண்டும், என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை டிச. 11-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT