Published : 14 Nov 2025 06:15 AM
Last Updated : 14 Nov 2025 06:15 AM
சென்னை: ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்க, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்களைக் கொண்ட ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடந்த அக். 17-ம் தேதி அறிவித்தார்.
அதை செயல்படுத்தும் விதமாக, தற்போது ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி கே.என். பாஷா இருப்பார். ஆணைய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற அலுவலர்கள் வி.பழனிகுமார் (ஐஏஎஸ்), எஸ்.ராமநாதன் (ஐபிஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள், சட்டவல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளை கேட்டறிவதுடன், அதன் சமூகக் காரணிகளையும் ஆராய்ந்து, புதிய சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை இந்த குழுவினர் பரிந்துரைக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயல் திட்டத்தையும் வகுக்க வேண்டும். மேலும், இந்த ஆணையம் தனது ஆய்வுகளை நிறைவு செய்து, 3 மாதங்களுக்குள் அரசுக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT