Published : 14 Nov 2025 07:55 AM
Last Updated : 14 Nov 2025 07:55 AM
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நவம்பர் மாத இறுதியில் மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன்பின், 5 இடங்களில் மண்டல மாநாடுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிமுக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினார். தமிழகம் முழுவதும் இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் சுற்றுப்பயணத்தில் மொத்தம் 172 சட்டப்பேரவை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தற்போது மீண்டும் அவர் இம்மாத இறுதியில் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கூறியது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இதுவரை 5 கட்டங்களாக 172 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் சுற்றுப்பயணம் செய்து முடித்துள்ளார். இதற்கிடையே தீபாவளி பண்டிகை, வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், மீதமுள்ள 62 தொகுதிகளில் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டுள்ளார். எப்போது இருந்து தொடங்குவது? எந்தெந்த தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்து முடித்தபின், அடுத்தகட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மதுரை, கோவை, திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய 5 இடங்களில் பிரம்மாண்டமான முறையில் மண்டல மாநாடுகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT