Published : 14 Nov 2025 07:18 AM
Last Updated : 14 Nov 2025 07:18 AM
எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை தேர்தல் அதிகாரிகள் தான் சரி செய்ய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதில் என்ன தவறு. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் மண்ணைச் சாப்பிட முடியுமா? நான் தொழில் செய்கிறேன். நான் யாரையும் மிரட்டி பணம் பறிக்கவில்லை. என்னுடைய விவசாய தொழிலை நான் செய்கிறேன். நான் அரசியலும் செய்கிறேன்.
இதில் எதை நீங்கள் தவறாக பார்க்கிறீர்கள்... நான் எங்கிருந்து சாப்பிடுவேன். எனது குழந்தைகளுக்கு எப்படி ஃபீஸ் கட்டுவேன்? எதைச் செய்ய வேண்டுமானாலும் நியாயமான முறையில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்று கையை கட்டிப்போட்டு வைத்தீர்கள் என்றால் நான் எதைச் சாப்பிடுவேன்... என் காருக்கு எங்கிருந்து டீசல் போடுவேன்?
நான் எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு இங்கு யாருக்கு உரிமை இருக்கிறது. இன்னும் பல தொழில்களை நான் ஆரம்பிக்கத்தான் போகிறேன். எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. என்னால் பல விஷயங்களைச் செய்ய முடியும். அரசியலும் செய்வேன். 24 மணி நேரமும் கையில் கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு ஓடி வேலை செய்கிறேன்.
நீங்களும் அப்படிச் செயல்படுங்கள்; சோம்பேறியாக வீட்டில் இருக்காதீர்கள். நீங்களும் பல இடத்திற்குச் செல்லுங்கள். உங்களது சொந்தக் காசில் வாழுங்கள். ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஏழு தலைமுறைக்கு சொத்துச் சேர்த்து வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் இன்றைக்கு என்ன தொழில் செய்கிறார். பணம் அவருக்கு எங்கிருந்து வருகிறது? ஒரு பக்கம் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. குற்றம் செய்தவர்களே திரும்பவும் குற்றம் செய்கின்றனர். கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடம் 40 ஆண்டுகளாக பிரச்சினைக்குரிய பாதை அது. அங்கு ஏன் போலீஸ் ரோந்து செல்லவில்லை. போலீசார் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரி செய்வதற்காகத்தான் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் செய்யப்படுகிறது. ஏற்கெனவே, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பல முறை எஸ்ஐஆர் பணி நடந்துள்ளது. எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அவ்வாறு சந்தேகங்கள் இருப்பதை தேர்தல் அதிகாரிகள் தான் சரி செய்ய வேண்டும்.
டெல்லி செங்கோட்டை அருகே அப்பாவிகள் 13 பேர் உயிரிழந்திருப்பது மிக மோசமான ஒரு பயங்கரவாத தாக்குதல்.மும்பையில் 2006-ல் நடந்தது போல் டெல்லியில் நடந்துள்ளது. இது மிகவும் அபாயகரமானது; ஆபத்தானது. அரசியல் கட்சிகளைக் கடந்து எல்லோரும் ஒன்றாக இணைந்து இதனைக் கண்டிக்க வேண்டும்.
நாட்டிற்குள் உற்பத்தியாகும் பயங்கரவாதி நமக்கு வேண்டாம். பயங்கரவாதம் என்பது மதத்தை தாண்டியது. தமிழகத்தை பொறுத்தவரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆனாலும் கோவை, சேலம் பகுதிகளில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. முதல்வர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். தனி கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் ஆபத்து அதிகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT