Published : 14 Nov 2025 06:51 AM
Last Updated : 14 Nov 2025 06:51 AM
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இதில் தேர்தல் களப்பணிகள், கூட்டணி நிலவரம், மாநாடு ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டில் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கலவையான கருத்துகள் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கூட்டம் முடிந்த பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக-வின் அடுத்தகட்ட நகர்வுகள், வளர்ச்சி குறித்தும், பல முக்கியமான கருத்துகள் குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்து ஆலோசித்துள்ளோம். எஸ்ஐஆர் பற்றி தற்போது பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. எதுவாக இருந்தாலும் தேமுதிக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திக்கத் தயாராக இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் தேமுதிக-வினரின் வாக்குகள் நீக்கப்படாமல் இருப்பது குறித்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனது 4-ம் கட்ட சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி விருதுநகரில் முடிவடைகிறது.
தமிழகத்தில் நடைபெறும் மக்கள் பிரச்சினைகள் அனைத்தையும் கவனித்து அறிக்கை தருவதுடன் அந்தக் களத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுப்பதிலும் தேமுதிக முதல் கட்சியாக செயல்பட்டிருக்கிறது. கூட்டணி விவகாரத்தில் தமிழகத்துக்கும், மக்களுக்கும் பலன் தரக்கூடிய அளவில் சிந்தித்து நல்ல முடிவு எடுப்போம். அதன்படி தேமுதிக யாருடன் கூட்டணி என்பது ஜனவரி 9-ம் தேதி நடைபெற உள்ள ‘மக்களை மீட்போம்’ மாநாட்டில் அறிவிக்கப்படும்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த ரகசியமும் கிடையாது. இந்த சட்டப்பேரவை தேர்தலில் மிக பிரம்மாண்டமான கூட்டணி அமையும். தேமுதிக அங்கம் வகிக்கும் அந்தக் கூட்டணி 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி. அதனால் முரசு சின்னத்தில் தான் எங்களது வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். வட மாநிலத்தில் இருந்து வருபவர்கள் பணி நிமித்தம் வந்தாலும் இங்கு வாக்காளராக ஆக முடியாது. தங்கள் பிறந்த மாநிலத்தில் வாக்களிப்பதுதான் சரியாக இருக்கும். எஸ்ஐஆர் திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையமும், மாநில அரசும் தான் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இந்த தேர்தலில் தவெக - திமுக இடையேதான் போட்டி என்ற விஜய் கருத்துக்கு பதில் கூற முடியாது. நாங்கள் 20 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT