Published : 14 Nov 2025 06:44 AM
Last Updated : 14 Nov 2025 06:44 AM

மேகேதாட்டுவில் அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதாக வெளியான தகவல் தவறு: துரைமுருகன் விளக்கம்

சென்னை: மேகே​தாட்​டு​வில் அணை கட்ட உச்ச நீதி​மன்​றம் அனு​ம​தி​யளித்​துள்​ள​தாக வெளி​யாகும் தகவல் ​களில் உண்​மை​யில்​லை என்று நீர்வளத் துறை அமைச்​சர் துரை​முரு​கன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட செய்திக்குறிப்பு: காவிரி ஆற்​றின் குறுக்கே 67 டிஎம்​சி கொள்​ளளவு கொண்ட அணையை மேகே​தாட்​டு​வில் அமைப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறு அறிக்​கையை கர்​நாடக அரசு தன்​னிச்​சை​யாகத் தயாரித்​து, மத்​திய நீர்​வளக் குழு​மத்​துக்கு 2018-ல் சமர்ப்​பித்​ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மனு​ தாக்​கல் செய்​தது.

இத்​திட்​டத்தை மேற்​கொள்​வதற்​காகத் தேவைப்​படும் சுற்​றுச்​சூழல் தாக்க அறிக்​கைக்​கான ஆய்வு வரம்​பு​களுக்கு ஒப்​புதல் பெறு​வதற்​காக, மத்​திய சுற்​றுச்​சூழல், வனம் மற்​றும் காலநிலை மாற்ற அமைச்​சகத்தை கர்​நாடக அரசு கடந்த 2020-ம் ஆண்டு அணுகிய​போது, மற்​றொரு மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்து, தமிழக அரசு அதைத் தடுத்து நிறுத்​தி​யது.

தொடர்ந்து, கர்​நாடக அரசின் பட்​ஜெட்​டில் மேகே​தாட்டு திட்​டத்​துக்கு ரூ.1,000 கோடியை ஒதுக்​கிய​போது, தமிழக அரசு எதிர்ப்பு தெரி​வித்​ததுடன், அனு​மதி அளிக்​கக்​கூ​டாது என்று மத்​திய அரசு, காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்தை வலி​யுறுத்தி தமிழக சட்​டப்​பேர​வை​யில் 2022 மார்ச் 21-ல் தீர்​மானம் நிறைவேற்​றியது.

மேலும், பிரதமர் மோடியை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், 2022 மார்ச் 31, மே 26-ம் தேதி​களில் சந்​தித்​த​போது, மேகே​தாட்டு திட்​டத்​துக்கு அனு​ம​தி​யளிக்​கக் கூடாது என்று வலி​யுறுத்​தி​னார். இந்த கால​கட்​டத்​தில், காவிரி நீர்மேலாண்மை ஆணை​யத்​துக்​கு, கர்​நாடக அரசின் கருத்​துருவை பரிசீலிக்க அதி​காரம் உள்​ளது என மத்​திய அரசு தெரி​வித்​தது. இதை எதிர்த்து 2022 ஜூன் 7-ம் தேதி உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மனு தாக்​கல் செய்தது.

இவ்​வாறு தமிழக அரசு எடுத்த பல்​வேறு முயற்​சிகளால் தற்போதுவரை காவிரி நீர் மேலாண்மை ஆணை​யக் கூட்​டத்​தில், மேகே​தாட்டு அணை குறித்து விவா​திக்​கப்​பட​வில்​லை. மேலும், தமிழக அரசு எடுத்த பல்​வேறு தொடர் முயற்​சிகளால், மேகே​தாட்டு கருத்​துருவை காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம், மத்​திய நீர்​வளக் குழு​மத்​துக்கு திருப்​பியனுப்​பியது.

இந்​நிலை​யில், மேகே​தாட்டு குறித்து பேசிய கர்​நாடக முதல்​வர், 2025-26-ல் தமிழகத்​துக்கு வழங்​கப்பட வேண்​டிய நீரின் அளவை விட கூடு​தலாக நீர் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், மேகே​தாட்டு அணை​யால் தமிழகத்​துக்கு எந்​த​வித பாதிப்​பும் ஏற்​ப​டாது என்​றும் தெரி​வித்​துள்ள கூற்று எவ்​விதத்​தி​லும் ஏற்​புடையதல்ல.

அதிக மழைப்​பொழிவு இருக்​கக்​கூடிய ஆண்​டு​களில் வேறு​வழி​யின்றி தமிழகத்​துக்கு கர்​நாடக அரசு நீரைத் திறந்து விடு​கிறதேயன்​றி, வறட்சி ஆண்​டு​களில் நமக்கு விகி​தாச்​சா​ரப்​படி ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட அளவுக்​கான நீர் வழங்​கப்​படு​வது இல்​லை. இந்​நிலை​யில், இந்த அணை தொடர்​பான வழக்​கு​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், ‘மேகே​தாட்டு அணை கட்​டு​வதை எதிர்க்​கும் தமிழக அரசின் கருத்​துகளை காவிரி நீர் மேலாண்மை ஆணை​யம் மற்​றும் மத்​திய நீர்​வளக் குழு​மத்​திடம் தெரிவிக்​கலாம் என்​றும், தமிழக அரசின் கருத்​துகளைக் கேட்​காமல் எந்​தவொரு முடி​வும் எடுக்​கக்​கூ​டாது என்​றும் ஆணை​யிட்​டுள்​ளது.

அதன்​படி, காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​திட​மும், மத்​திய நீர்​வளக் குழு​மத்​தின் முன்​பும் தமிழக அரசு தனது வலு​வான வாதங்​களை முன்​வைக்க உள்​ளது. இதற்​கிடையே, மேகே​தாட்​டு​வில் அணை கட்​டு​வதற்கு உச்ச நீதி​மன்​றம் ஒப்​புதல் அளித்​து​விட்​ட​தாக சில தவறான தகவல்​கள் வெளிவரு​வது கண்​டிக்​கத்​தது. இந்த தகவலில் எள்​ளள​வும் உண்​மை​யில்​லை.

காவிரி டெல்டா பாசன விவ​சா​யிகளின் உரிமை​களை திமுக அரசு ஒருபோதும் விட்​டுக்கொடுக்​காது. காவிரி​யின் குறுக்கே புதிய அணை கட்​டு​ வதற்​கான கர்​நாடக அரசின் அனைத்து முயற்​சிகளையும் தமிழக அரசு ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தும். இவ்வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x