Published : 13 Nov 2025 02:06 PM
Last Updated : 13 Nov 2025 02:06 PM
திருச்சி: அடிக்கடி விபத்துகள் ஏற்படும் திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் உடனடியாக சுரங்கப்பாதை அமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் நடத்திய திடீர் சாலை மறியலால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
திருச்சி- சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தேவதானம் அருகே உள்ள சஞ்சீவி நகர் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதான தேசிய நெடுஞ்சாலையுடன் நகர்ப்புற சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளை இணைக்கின்ற பகுதி என்பதால் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.
வழக்கமாக நான்குபுறங்களில் இருந்து வாகனங்கள் வந்து செல்லும் நிலையில் இங்கு மட்டும் 7 முனைகளில் இருந்து வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள சிக்னல்களையும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கவனித்து நிறுத்தி செல்வதில்லை. இதனால் இங்கு தினந்தோறும் விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.
ஏராளமான வாகன ஓட்டிகள் காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்த நிலையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளிகள் நிறைந்த அரியமங்கலம், பனையக்குறிச்சி, சர்க்கார் பாளையம், வேங்கூர், கல்லணை உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கிராமங்கள் இங்கு உள்ளன. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களின் தேவைக்காக சஞ்சீவி நகர் பகுதியை கடக்கும்போது அதிவேகத்தில் வரும் வாகனங்களால் விபத்துகளில் சிக்குகின்றனர்.

எனவே சஞ்சீவி நகர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது. இதற்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று காலை சர்க்கார்பாளையம்- கல்லணை சாலை பகுதியை சேர்ந்த 100-க்கும் அதிகமானோர் இன்று காலை சஞ்சீவி நகர் சிக்னலில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமூக தீர்வு காண்பதாக காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
அதையடுத்து திருச்சி கிழக்கு தாசில்தார் விக்னேஸ்வரன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் உதவி பொறியாளர் அசோக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். "4 மாதத்திற்குள் சுரங்கப்பாதை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கும்" என்று உறுதி அளித்தனர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சஞ்சீவி நகர் பகுதியில் பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்றும் விபத்து: சாலை மறியல் நடைபெறுவதற்கு முன்பு சஞ்சீவி நகர் சிக்னலில் முன்னே சென்ற லாரி மீது பின்னால் வந்த லாரி பயங்கர வேகத்தில் மோதியது. இவ்விபத்தில் லாரிகள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக் கொண்டன. பின்னால் வந்த லாரி ஓட்டுநரின் கால் முறிந்தது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT