Published : 13 Nov 2025 01:23 PM
Last Updated : 13 Nov 2025 01:23 PM
கோத்தகிரி: கீழ் கோத்தகிரி தனியார் டீ எஸ்டேட் கிணற்றில் அழுகிய நிலையில் புலியின் சடலத்தை கைப்பற்றி வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. வனவிலங்குகளின் இயற்கைக்கு மாறான இறப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதுகாக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள புலி, சிறுத்தை, யானை உட்பட்ட வனவிலங்குகளின் இறப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
நீலகிரி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட கீழ் கோத்தகிரி வனச்சரக பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள் புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, 'கீழ் கோத்தகிரி அருகில் உள்ள சோலூர் மட்டம் பகுதியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கடசோலை பகுதி. ரங்கசாமி மலைக்குச் செல்லும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அஞ்சனகிரி என்கிற தனியார் தேயிலை தோட்டம் இருக்கிறது.
இந்த தோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளனர். சுமார் 20 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட கிணற்றுக்குள் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து இந்த வழியாக சென்ற மக்கள் சிலர் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். புலி ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் எங்களுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். நாங்கள் ஆய்வு மேற்கொண்டு அழுகிய நிலையில் புலியின் சடலத்தை மீட்டோம்.
இந்த பகுதியில் நடமாடி வந்த புலி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இறந்த புலியின் பாலினம், வயது மற்றும் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட டீ எஸ்டேட் நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT