Published : 13 Nov 2025 10:20 AM
Last Updated : 13 Nov 2025 10:20 AM
ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதைச் சாதித்துக் கொள்வதற்காக காங்கிரஸ் கட்சி தவெக-வுடன் கூட்டணி சேருமா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இருப்பினும் பிஹார் தேர்தல் முடிவுகளை ஒட்டியே தமிழகத்தில் கட்சிகளின் கணக்குகள் மாறும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கட்சி தொடங்கி இன்னும் ஒரு தேர்தலை கூட சந்திக்காத தவெக-வுடன் கூட்டணி வைக்க, முக்கிய கட்சிகள் பலவும் முண்டியடிக்கும் நிலையில், அக்கட்சி, தனது தலைமையில் கூட்டணிக்கு சம்மதிப்பவர்கள் தாராளமாக வரலாம் என நிபந்தனை வைத்துக் காத்திருக்கிறது. தவெக-வின் தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைந்தால், அந்த அணிக்கும் திமுக-வுக்கும் இடையே தான் போட்டி என்று விஜய்யைப் போலவே டிடிவி.தினகரன் சொன்னாலும், அவருக்கு தவெக-வின் கதவுகள் இன்னமும் திறந்தபாடில்லை.
அதேபோல, “கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு” என தனது கூட்டத்தில் தவெக கொடிகளைப் பார்த்துவிட்டு பழனிசாமி பரவசப்பட்ட போதிலும், கூட்டணி விஷயத்தில் தங்களின் முந்தைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது தவெக பொதுக்குழு. இப்படி வலிய வந்து நீளும் கூட்டணி கரங்களை புறந்தள்ளும் விஜய், 2026 தேர்தலை சந்திக்க என்னதான் திட்டம் வைத்திருக்கிறார்? தனது தலைமையில் போட்டி, அதில் தன்னை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளை இணைத்துக்கொள்வது என்பதுதான் அவரது திட்டம். அதில் அவர் முதல் இடத்தில் வைத்திருப்பது காங்கிரஸைத் தான்.
பாஜக தனது கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்ட நிலையில், மற்றொரு பிரதான தேசிய கட்சியான காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது விஜய்யின் நோக்கமாக இருக்கிறது. தனக்குள் அரசியல் ஆசை துளிர்விட தொடங்கிய வேகத்திலேயே டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துவிட்டு வந்தவர் விஜய்.
அந்த நெருக்கம் இன்னமும் தொடர்வதை, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது விஜய்யை ராகுல் காந்தி தொடர்பு கொண்டு பேசியதன் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இப்படி இரண்டு தரப்பும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கும் நிலையில், இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்தால் குறைந்தது 175 இடங்களில் வெற்றி நிச்சயம் என விஜய் தரப்பில் இருந்து காங்கிரஸுக்கு எடுத்துச் சொல்லப்படுகிறதாம்.
மேலும், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தவெக உடன் கூட்டணி வைத்தால் நமக்கு கிட்டத்தட்ட 100 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று தலைமைக்கு தபால் அனுப்புகிறார்கள். அப்படி வாய்ப்புக் கிடைத்தால் கட்சி பழையபடி புது வேகம் எடுக்கும் என்பது அவர்களது கணிப்பாக இருக்கிறது. ஆனால், திமுக கூட்டணியை விட்டு வெளியேற காங்கிரஸுக்கு தயக்கமும் இருக்கிறது.
கருணாநிதி காலத்தில் இருந்து தொடரும் சுமுக உறவு, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதல் ஆளாக முன்மொழிந்த ஸ்டாலின், தமிழகத்தில் குறிப்பிடத் தகுந்த மக்களவை இடம் இவற்றையெல்லாம் நினைத்து காங்கிரஸ் தரப்பில் தயக்கம் காட்டப்படுகிறது. அதேசமயம், இந்த விஷயத்தில் பிஹார் தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும் காங்கிரஸ், “இப்போதைக்கு கூட்டணி பற்றி யாரும் பொதுவெளியில் எதையும் பேசவேண்டாம்” என கட்சியினருக்கு வாய்ப்பூட்டுப் போட்டிருக்கிறது.
பிஹாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தான் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் நிதிஷ் குமார் கூட்டணியை விட்டு வெளியேறி மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொள்வார் என காங்கிரஸ் கணக்குப் போடுகிறது. அப்போது மத்திய ஆட்சியை கவிழ்ப்பதற்கான முயற்சி நடந்தால் மக்களவையில் 22 எம்பி-க்களை வைத்திருக்கும் திமுக-வின் தயவு பாஜக-வுக்கு தேவைப்படலாம். அந்த சமயத்தில் திமுக கூட்டணியில் இருப்பதே நல்லது என காங்கிரஸ் கருதுகிறது.
ஒருவேளை, அங்கு காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால், அப்போது தவெக-வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் முன்வரலாம் என்கிறார்கள். இந்த கணக்கு விஜய்க்கும் எடுத்து சொல்லப்பட்டிருப்பதால் கூட்டணி விஷயத்தை சற்றே ஆறப்போட்டு வைத்திருக்கிறது தவெக. காங்கிரஸ் வரவைப் பொறுத்து மற்ற கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என்பது தவெக-வின் கணக்கு. அப்போது திமுக கூட்டணியில் உள்ள வேறு சிலகட்சிகளையும் தங்களுடன் இணைக்க தவெக முயற்சிக்கலாம். ஆக, தமிழகத்தின் கூட்டணி கணக்குகளை பிஹாரின் தேர்தல் முடிவுகளும் திருத்தி எழுதலாம் என்பதே இப்போதைய நிலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT