Published : 13 Nov 2025 09:29 AM
Last Updated : 13 Nov 2025 09:29 AM
தேர்தல் சமயத்தில் தேவையற்ற மனக்கசப்புகள் வேண்டாம் என்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொன்முடியை மீண்டும் துணைப் பொதுச்செயலாளராக்கினார் ஸ்டாலின். ஆனால், பொன்முடிக்கும் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரான லட்சுமணன் எம்எல்ஏ-வுக்கும் இடையில் மீண்டும் உரசல் ஆரம்பித்துவிட்டது.
எஸ்ஐஆரைக் கண்டித்து இண்டியா கூட்டணி சார்பில் விழுப்புரத்திலும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது லட்சுமணனின் மத்திய மாவட்ட எல்லைக்குள் வந்ததால் இதற்கான ஏற்பாடுகளை அவரே முன்னின்று கவனித்தார்.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்துக்காக அச்சிடப்பட்ட நோட்டீஸில், கூட்டணிக் கட்சியான விசிக-வின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி-யின் பெயரையும் திமுக மாநில விவசாய தொழிலாளர் அணியின் செயலாளர் அன்னியூர் சிவா எம்எல்ஏ-வின் பெயரையும் சிறியதாக போட்டு அவர்களை இருட்டடிப்பு செய்துவிட்டதாக சிலர் சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
இதைக் கண்டித்து சமூக வலைதளத்தில் விசிக-வினர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். உடனடியாக இதில் தலையிட்ட பொன்முடி உடனடியாக, லட்சுமணனை தொடர்பு கொண்டு, “கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள விசிக-வின் பொதுச்செயலாளரான ரவிக்குமாரை ஏன் முன்னிலையில் போடவில்லை...
அன்னியூர் சிவாவின் பெயரை ஏன் வரவேற்புரையில் போடவில்லை? உங்களோடு இருக்கிறார் என்பதற்காக, முன்னாள் எம்எல்ஏ-வான புஷ்பராஜுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா? அப்படியானால் விசிக வாக்கு நமக்கு தேவையில்லையா? தலைமையில் இருந்து கேள்வி கேட்டால் இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது? நோட்டீஸை இறுதி செய்வதற்கு முன்பாக மண்டல பொறுப்பாளரான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றீர்களா?” என கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டு துளைத்து எடுத்துவிட்டாராம்.
இதையடுத்து அந்த நோட்டீஸை அப்படியே வைத்துவிட்டு ரவிக்குமார் மற்றும் அன்னியூர் சிவாவின் பெயர்களை பெரிதாகப் போட்டு புதிதாக இன்னொரு நோட்டீஸை அடித்து அதை விநியோகம் செய்திருக்கிறது லட்சுமணன் தரப்பு. எடுத்த பதவியை திரும்பக் கொடுத்துவிட்டால் விழுப்புரத்தில் விவகாரம் இருக்காது என்று நினைத்தே பொன்முடியை மீண்டும் துணைப் பொதுச் செயலாளராக்கியது திமுக. ஆனால், நடப்பது என்னவோ அதற்கு நேர் மாறாகத்தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT