Published : 13 Nov 2025 06:12 AM
Last Updated : 13 Nov 2025 06:12 AM
சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மத்திய அரசைப்பின்பற்றி அகவிலைப்படியை ஜூலை 1 முதல் உயர்த்தி வழங்குவது, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது கோரிக்கை முழக்க போராட்டம் நடந்தது.
தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தி்ல் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதில், தலைமைச் செயலக சங்க தலைவர் கு.வெங்கடேசன் பேசும்போது, ``திமுகவின் பிரதான வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழுவும் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலம் கடத்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. அதேபோல், அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் உயர்த்தவில்லை. அரசுத் துறைகளில் லட்சக்கணக்கில் காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாமல் அரசுப் பணிகள் தனியார்மயமாகி வருகின்றன.
அரசு பணியிடங்களை நிரப்பாமல் தனியார்மயமாக்குவதும் இட ஒதுக்கீடு இல்லாமல் செய்வதும்தான் சமூக நீதியா?'' என்றார். இதற்கிடையே, அரசு ஊழியர் ஒருவர், “தலைமைச் செயலக சங்கம் சரியாக செயல்படவில்லை, 4 ஆண்டு காலம் பொறுமையாக இருந்துவிட்டு தற்போது போராட்டத்தை நடத்துகிறீர்களே?” என்று சங்க நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT