Published : 12 Nov 2025 03:54 PM
Last Updated : 12 Nov 2025 03:54 PM
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'தேசிய தலைவர் தேவர் பெருமான்' படத்தை தடை செய்யக் கோரி, சத்திரிய சான்றோர் படை நிறுவன தலைவர் ஹரிநாடார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணையை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது. கடந்த அக்டோபர் 30-ம் தேதி வெளியான இந்த திரைப்படத்தில், முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து எந்த ஆதாரங்களும் இல்லாமல், அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக, ஹரிநாடார் தனது மனுவில் கூறியிருக்கிறார்.
கடந்த 1939-ம் ஆண்டு விருதுநகர் நகராட்சி தேர்தலில், ஆடு வாங்கிக் கொடுத்து, வரி செலுத்தி, காமராஜர் போட்டியிட தேவர் உதவியதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மைக்கு புறம்பான இந்த தகவல் ஏழாம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்றிருந்தது. அதை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, 2019-ம் ஆண்டு இந்தp பகுதிகள் நீக்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் தனது ஆட்சி காலத்தில் 19 அணைகளை கட்டி, நீர்ப்பாசனத் துறையில் புரட்சி ஏற்படுத்தியவர். பல்வேறு இடங்களில் தொழிற்பேட்டைகளை அமைத்ததுடன், 1,200 பள்ளிகளை துவங்கி, மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர் என மனுவில் பட்டியலிட்டுள்ளார்.
இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில், காமராஜரை தவறாக சித்தரித்து காட்சிகள் அமைக்கப்பட்டுள்ள ‘தேசிய தலைவர் தேவர் பெருமான்’ படத்தை தடை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுவை படித்துப் பார்த்து விளக்கம் அளிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT