Published : 12 Nov 2025 09:50 AM
Last Updated : 12 Nov 2025 09:50 AM
ஜெயலலிதா காலம் தொட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக அணியில் பயணித்தவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு. அண்மைக் காலமாக திமுக அரசுக்கு வாக்காலத்து வாங்குவதில் திமுக-வினரை விட ஒருபடி மேலாகவே ஊடக விவாதங்களில் விளாசி வருகிறார். இந்நிலையில், அண்மையில் அறிவாலயத்துக்கே சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசி இருக்கும் தனியரசு, ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த சிறப்புப் பேட்டி.
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தொடங்கியதன் நோக்கம் என்ன?
கொங்கு இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெறவும், சமூகத்தில் அதிகாரத்தைப் பெறவும், அதன் மூலம் அவர்கள் முன்னேற்றம் அடையவும், அரசுத் துறைகள் மற்றும் காவல்துறையின் கொங்கு மக்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடவும் கடந்த 2001-ம் ஆண்டு இந்த பேரவை தொடங்கப்பட்டது.
2011-ல் ஜெயலலிதா உங்களுக்கு பரமத்திவேலூரில் போட்டியிட வாய்ப்பளித்தார். அவரது மறைவுக்குப் பிறகும் அதிமுக-வுடனான உறவைத் தொடர்ந்த நீங்கள் திடீரென தற்போது திமுக பக்கம் செல்ல என்ன காரணம்?
ஜெயலலிதா எனக்கு 2011, 2016 ஆகிய தேர்தல்களில் வாய்ப்பளித்தார். நானும் அவருக்கு வெற்றியை பரிசாகக் கொடுத்தேன். ஆனால், பழனிசாமி எல்லோரையும் ஏமாற்றியதைப் போல் 2021 சட்டப்பேரவை தேர்தலில் என்னையும் ஏமாற்றிவிட்டார். இப்போது அதிமுக உடைந்து கிடக்கிறது. ஒன்றுபட்ட அதிமுக-வுக்காக தொடர்ந்து போராடினேன். இணக்கமாகச் செல்ல நான் வைத்த கோரிக்கைக்கு பழனிசாமி செவி சாய்க்கவில்லை. ஜெயலலிதா மீதான விசுவாசத்துக்காக, அவரது மறைவுக்குப் பிறகும், 8 ஆண்டுகள் அதிமுக-வுடன் பயணித்தேன். இப்போது திமுக-வை ஆதரிக்கிறேன்.
அதிமுக-வின் தொடர் தோல்வி, பாஜக-வுடனான கூட்டணி ஆகியவற்றால் உங்களுக்கு நெருடல் உள்ளதா?
பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. பாஜக-வின் சித்தாந்தங்களுக்கு எதிராக பேசி வருபவன் நான். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்திருப்பதும் எனக்கு நெருடலைத் தந்தன.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் தாக்கம் எப்படி இருக்கிறது... 2026 தேர்தலில் எப்படி இருக்கும்?
அதிமுக உடைந்து கிடப்பதால் வலிமை இழந்து காணப்படுகிறது. பழனிசாமி தனது செயல் மற்றும் பேச்சால் மக்களைத் தன் பக்கம் ஈர்க்க எதுவும் செய்யவில்லை. தேசிய தலைமையை காட்டித்தான் தமிழக பாஜக தேர்தலை சந்திக்க விரும்புகிறது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப செயல்படவில்லை. இவரும் தனது பேச்சாலும், செயலாலும் மக்களை இதுவரை ஈர்க்கவில்லை.
தமிழகத்தில் மக்கள் ஆதரவு எந்தக் கூட்டணிக்கு இருக்கிறது... அதற்கு காரணம் என்ன?
நிச்சயமாக திமுக கூட்டணிக்குத்தான் ஆதரவு அதிகமாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மகளிர் உரிமைத் தொகை திட்டமும், மகளிருக்கான இலவசப் பேருந்து பயண திட்டமும், பள்ளிகளில் காலை உணவு திட்டமும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களை பாதிக்கும் திட்டங்கள் எதையும் திமுக கொண்டுவரவில்லை.
திமுக கூட்டணி ஏற்கெனவே ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் போது அங்கே உங்களுக்கு இடம் கிடைக்கும் என நம்புகிறீர்களா?
முதல்வர் ஸ்டாலின் என் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். கடந்த 2021 தேர்தலின்போதே என்னை கூட்டணிக்கு அழைத்தார். அதனால் நிச்சயம் எனக்கான அங்கீகாரத்தைக் கொடுப்பார்.
கொமதேக ஏற்கெனவே திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், உங்களுக்கான அங்கீகாரம் அங்கே கிடைக்கும் என நம்புகிறீர்களா?
திமுக-வில் நிச்சயம் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மேலும், நாங்கள் ஒன்றும் கொமதேக-வுக்கு போட்டி கட்சி இல்லையே. அதனால் அக்கட்சியின் தலைவர் என்னை எதிர்க்கமாட்டார். இணக்கமாகவே இருப்பார் என நம்புகிறேன்.
திமுக-வுக்கும் தவெக-வுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது பல்கலைக்கழகத்தை பால்வாடி எதிர்ப்பது போன்றது. அவர் வேண்டுமானால் அப்படி பேசி மகிழ்ந்துகொள்ளலாம். அவரது இந்த பேச்சு சினிமா வசனத்தைப் போன்றது; அதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT