Published : 12 Nov 2025 09:26 AM
Last Updated : 12 Nov 2025 09:26 AM
“பழனிசாமியை வீழ்த்தாமல் ஓயமாட்டேன்” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சபதம் போடுகிறார். “கோடநாடு கொலை வழக்கில் முதல் குற்றவாளி பழனிசாமி தான்; அவரிடம் இருப்பது உண்மையான அதிமுக இல்லை” என்கிறார் புதிதாய் புறப்பட்டிருக்கும் செங்கோட்டையன். “அதிமுக-வை ஒருங்கிணைப்பதே எனது வேலை” என தன்பங்கிற்கு சபதம் செய்திருக்கிறார் ஓபிஎஸ். இவர்களுக்கு மத்தியில், “அதிமுக-வை மீண்டும் ஒன்றுபடுத்துவேன்” என்கிறார் சசிகலா.
இவர்களின் பேச்சு அத்தனையுமே அதிமுக என்ற கட்சியை நோக்கியதாக இல்லாமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் இபிஎஸ்ஸை நோக்கியதாகவே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இபிஎஸ் இல்லாத அதிமுக என்பதுதான் இவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. இதற்கு பலமான காரணம் இருக்கிறது.
சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் என அனைவரையும் அதிமுக-விலிருந்து நீக்கியது இபிஎஸ் தான். அதிமுக-வின் பிரதான முகங்களாக அறியப்பட்ட தங்களை ஒரேயடியாக கட்சியை விட்டே தூக்கி எறிந்து தன்னை ஒரு ஆளுமையாக இபிஎஸ் நிரூபித்திருப்பதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான், எப்படியாவது இபிஎஸ்ஸை தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தில் தங்களில் ஒருவர் வந்தமர துடிக்கிறார்கள். அதனாலேயே ஆளுக்கொரு திசையில் நின்று இபிஎஸ்ஸை நோக்கி அம்புகளை எய்கிறார்கள்.
ஆனால், இவர்கள் செய்யும் இந்த சமருக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் அவ்வளவாய் ஆதரவில்லை. அவர்கள் இபிஎஸ்ஸை தங்களின் தலைவராக ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில், ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்ட நால்வரணியின் ஒரே நம்பிக்கை இப்போது பாஜக-வாக மட்டுமே உள்ளது. இபிஎஸ்ஸை கட்டுக்குள் வைப்பதற்காவது பாஜக தங்களுக்கு உதவும் என்கிற நம்பிக்கையில் இவர்கள் இருக்கிறார்கள். அதேசமயம், பாஜக தலைமையின் தயவு யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்க முடியும் என்பதே இப்போதைய சூழ்நிலை.
அதிமுக கூட்டணிக்கு தவெக இசைந்துவிட்டால் பாஜக-வை உதறிவிடுவார் இபிஎஸ் என்று சொல்லப்படும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜக தங்களுக்கு ஆதரவு அளித்து இப்பிஎஸ்ஸை இக்கட்டுக்கு உள்ளாக்கும் என்பது நால்வரணியின் எண்ணம். ஆனால், தற்போதைய சூழலில் அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் யாரும் இவர்களை பொருட்படுத்துவதில்லை.
மக்கள் மத்தியில் செல்வாக்கற்ற இவர்களை விட, தொண்டர்களையும் கட்சியையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் இபிஎஸ்ஸையே அவர்கள் முக்கியமாக கருதுகிறார்கள். இவருக்காக ஆக்டிவ் அரசியல்வாதியான அண்ணாமலையையும் சமரசம் செய்து கொண்டது அந்த அடிப்படையில் தான். தங்களிடம் இருக்கும் 18 சதவீதமும், அதிமுக-விடம் இருக்கும் 21 சதவீதமும் தங்களை வெற்றிக் கோட்டைக்கு இட்டுச் செல்லும் என பெரிதும் நம்புகிறது பாஜக தலைமை.
அதேசமயம், எந்தச் சூழலையும் சாதுர்யமாக சமாளிக்கக் கற்றுக் கொண்டுவிட்ட இபிஎஸ், தனக்கு பாஜக பக்கபலமாக இருப்பதை புரிந்து கொண்டு அவர்களுடனான உறவை அழுத்தமாக பேணி வருகிறார். அந்த நம்பிக்கையில் தான், "எத்தனையோ துரோகிகள், எட்டப்பன்கள் நம் இயக்கத்தில் இருந்து கொண்டே நம்மை வீழ்த்த முயற்சித்தார்கள். மக்கள் மற்றும் தொண்டர்கள் துணையோடு அத்தனை துரோகங்களையும் முறியடித்துள்ளோம். அதிமுக-வை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது" என்று கர்ஜிக்கிறார் இபிஎஸ்.
ஆக தற்போதைய சூழ்நிலையில், இபிஎஸ் இல்லாத அதிமுக என்பதற்கு கொஞ்சம்கூட வாய்ப்பே இல்லை என்பதே நிதர்சனம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT