Published : 12 Nov 2025 05:26 AM
Last Updated : 12 Nov 2025 05:26 AM
அரியலூர்: அரியலூர் அருகே காஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி நேற்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சியில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு அரியலூருக்குப் புறப்பட்டது. திருச்சி இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ்(34) லாரியை ஓட்டினார்.
நேற்று காலை 6.40 மணியளவில் வாரணவாசியை அடுத்த விநாயகர் கோயில் வளைவில் திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீப்பற்றி எரியத் தொடங்கி, வெடித்துச் சிதறின. ஓட்டுநர் கனகராஜ் காயத்துடன் அங்கிருந்து தப்பினார்.
தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கூடுதலாக திருமானூர், பெரம்பலூர், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
லாரியில் இருந்த 350 சிலிண்டர்களில் 100-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின. இவற்றின் சப்தம் பல கி.மீ. தொலைவுக்கு கேட்டது. 500 மீட்டர் தூரத்துக்கு சிலிண்டர்கள் தூக்கி வீசப்பட்டன.
சிலிண்டர்கள் வெடித்து சிதறியபோது 30 அடி உயரத்துக்கு மேல் தீ ஜூவாலை எழும்பியது. மேலும், அப்பகுதி முழுவதும் 50 அடி உயரத்துக்கு கரும்புகை காணப்பட்டது. இந்த விபத்து காரணமாக திருச்சி-அரியலூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT