Published : 12 Nov 2025 05:01 AM
Last Updated : 12 Nov 2025 05:01 AM
சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நாடு முழுவதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக இருக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு முறை, 5 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப்படை வீரர்கள், விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து வந்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். விமான நிலையத்துக்கு வரும் கார்கள் அனைத்தும், வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்யப்படுகின்றன.
விமானப் பயணிகளுக்கு வழக்கமான சோதனைகளுடன், பயணிகள் விமானங்களில் ஏறும் இடத்தில், மீண்டும் ஒருமுறை, அவர்களுடைய கைப்பை உட்பட அனைத்தையும் தீவிரமாக சோதிக்கின்றனர். பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் லக்கேஜில், கத்திரிக்கோல், ரேசர் பிளேடு, ஊசிகள், கயிறு, இன்சுலேசன் டேப், வாக்கிங் ஸ்டிக், கோடாரி போன்ற கூர்மையான ஆயுதங்கள், ஊறுகாய் பாட்டில் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், அனைவருக்கும் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளதோடு, அவர்களின் பணி நேரமும் 12 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரம், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வருமாறு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. விமானங்களில் பார்சல் ஏற்றும் இடங்கள், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT