Published : 12 Nov 2025 12:38 AM
Last Updated : 12 Nov 2025 12:38 AM
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகில் நேற்று முன்தினம் மாலையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக ‘எக்ஸ்' தளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி குண்டுவெடிப்பு உயிரிழப்பால் எனக்கு ஏற்பட்ட வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டேன், காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தேன். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த சம்பவம் குறித்து உயர் அமைப்புகள் முழு வீச்சில் விசாரித்து வருகின்றன. அவை இதுகுறித்து ஆழமாக ஆராயும்’’ என்று கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடியும் இரங்கல் தெரிவித்தார். சம்பவ இடத்தில் என்எஸ்ஜி, டெல்லி காவல்துறை, எப்எஸ்எல் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றன.
முன்னதாக அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “டெல்லி செங்கோட்டை அருகில் உள்ள சுபாஷ் மார்க் சிக்னலில் ஹுன்டாய் ஐ20 காரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள், டெல்லி குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு பிரிவு குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. டெல்லி காவல் துறை ஆணையர் மற்றும் சிறப்பு பிரிவு பொறுப்பாளரிடம் நான் பேசினேன். அவர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொள்வோம்” என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT